×

கண்டதேவி கோயில் தேர் ஏப்ரலில் வெள்ளோட்டம் ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை, டிச.18: கண்டதேவி கோயில் புதிய தேரின் வெள்ளோட்டம் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸவரர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் இந்த கோயிலில் திருவிழாவையொட்டி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். தற்போது இந்த கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர், வெள்ளோட்டம் பார்க்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்களை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த மாதம் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை திடீரென தள்ளி வைத்துள்ளதாக கூறுகின்றனர். கோயில் திருவிழா நெருங்கி வருவதால், விரைவாக தேர் வெள்ளோட்டம் நடத்தி, தயார்நிலையில் வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வருகிற ஏப்ரல் மாதம் கண்டதேவி கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும். எந்த தேதி என்பதை அறநிலையத் துறை ஆணையர் முடிவு செய்வார் என கூறப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்த நீதிபதி, மனுவை முடித்து வைத்தார்.

Tags : Kandadevi Devi Temple ,
× RELATED செல்போன் சுவிட்ச் ஆப் 2 வயது குழந்தைக்கு தாசில்தார் நோட்டீஸ்