×

உள்ளாட்சியில் சீட் கிடைத்ததால் பணப்பட்டுவாடா செய்யும் அதிமுக வேட்பாளர்கள் எதிர்க்கட்சி, சுயேட்சைகள் குற்றச்சாட்டு

பரமக்குடி, டிச.18:  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்து அதிமுக.வில் அதிகாரபூர்வமாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாட செய்வதற்கான பணியினை தொடங்கியுள்ளதாக சுயேட்சைகள் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே அதிமுக.வினர் மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பணம் பட்டுவாடா மற்றும் பிரியாணி அளிக்க தொடங்கியதாக கூறப்பட்டது. பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் முடிந்து விட்டது. மனுதாக்கல் செய்வதற்கு கட்சி சார்பாக தேர்தலில் நிற்பதற்கு கொடுக்கப்படும் அதிகாரபூர்வ கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளதால் தமக்கு சீட் உறுதியாகி விட்டதை தெரிந்து கொண்ட அதிமுக வேட்பாளர்கள் பணம் பட்டுவாடா செய்ய களத்தில் குதித்துள்ளதாக தெரிகிறது.

ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஆயிரம் வாக்குகள் உள்ள உறுப்பினருக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, ஒன்றிய குழு தலைவருக்கு போட்டியிடும் நபர்கள் முன்பணமாக தேர்தல் செலவுக்கு பணம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளதால் பணம் பட்டுவாடா செய்துவதற்கு தயாராகவுள்ளனர். அதைபோல் மாவட்ட ஊராட்சிக்கு 50 ஆயிரம் வாக்குகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாவட்ட ஊராட்சிகுழு தலைவராக போட்டியிடும் நபர்கள் பணம் கொடுப்பதால், அதை பெற்றுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவுள்ளனர். இதற்காக கட்சியினர் மற்றும் பொதுவாக உள்ள வாக்கார்களை கணக்கொடுக்கும் பணி தொடங்கியுள்ளது. அதைபோல் சிலர் சட்டமன்ற தேர்தலுக்கு கொடுத்த பெயர் பட்டியலை கொண்டு பணம் கொடுப்பதற்கான பணியினை தொடங்கியுள்ளனர். கிராம பஞ்சாயத்துக்கு ரூ.500, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.500, மாவட்ட கவுசிலருக்கு ரூ.1000 என வாக்காளர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனால் சுயோச்சைகள் மற்றும் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் பணம் பட்டுவாடா செய்வதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக ஆளும் கட்சியாக உள்ளதால், அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு மக்கள் விரும்பும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதைபோல், பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த, தீவிர கண்காணிப்பு பணியில் நேர்மையான அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என எதிர் கட்சியினரின் கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags : independents ,AIADMK ,Lok Sabha ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...