×

மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு, டிச.18: மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மானாவரியாகவும், நீர்பாசன முறையிலும் பயிரிடப்படுகிறது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மானாவாரியில் அதிகமாக சாகுபடி செய்யப்படவில்லை. தற்போது, நீர்பாசன முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் டிசம்பர் முதல் அறுவடை செய்யப்படுகிறது. பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக முழு விளைச்சல் அடையாத பயிர்காய்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்பட்டு விட்டது. தற்போது முழு விளைச்சல் கண்ட பயிர்கள் அறுவடை துவங்கி விட்டது. வரும் மார்ச் வரை அறுவடை காலமாகும். கடந்த அக்டோபர் மாதம் வரை ஆலைகளுக்கு ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், மாவுச்சத்து அடிப்படையில் ஒரு பாயிண்ட் 380 வரையிலும், கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநில சிப்ஸ் தயாரிக்கும் வியாபாரிகள் டன் ஒன்றுக்கு 11,500 ரூபாய் வரையிலும் கொள்முதல் செய்தனர்.

ஆனால், தொடர்ச்சியாக விலை குறைந்து டன் 7 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வியாபாரிகள் காள்முதல் செய்கிறார்கள். ஒரு பாயிண்ட் 290 என்ற அளவில் வியாபாரம் நடைபெறுகிறது. குறைவான உற்பத்தி இருந்தும் விலை குறைகிறது என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். அதேசமயம், மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு 4 சதவீத ஜிஎஸ்டி வரியும், ஸ்டார்ச் மாவுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. இதில் ஸ்டார்ச் மாவு, மருந்து மற்றும் பின்னலாடை கைத்தறி துணிகளுக்கு மெருகூட்டவும், அதன் பசை தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வரி உயர்வால் கடுமையாக விற்பனை பாதிக்கப்படுகிறது. ஸ்டார்ச் மீது விதிக்கப்படும் 12 சதவீத வரியை சேகோவை போல 4 சதவீத வரி மட்டுமே விதிக்க வேண்டும். அப்போது தான் ஒரு டன் மரவள்ளி கிழங்கிற்கு ஆயிரம் ரூபாய் வரை விலை உயரும். அதோடு மட்டுமல்லாமல் மரவள்ளி வாரியம் அமைத்து விலை நிர்ணயம் செய்து மரவள்ளி விவசாயிகளின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...