×

டாஸ்மாக் கடைக்கு தண்ணீரில் நடந்து செல்லும் வாடிக்கையாளர் கண்மாய் கரையில் மலைபோல் குவிந்து கிடக்கும் காலி பாட்டில்கள்

திருமயம்,டிச.18: திருமயம் அருகே கண்மாய் பகுதியில் கொட்டப்பட்டுள்ள காலி மதுபாட்டில்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில சாலையோரம், மக்கள் குடியிருப்பு, பள்ளி, கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என கடந்தாண்டு தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் அகற்றி வேறோரு இடத்தில் திறந்த நிலையில் ஒரு சில டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் பெரும் சிரமப்பட்டனர். இருந்த போதிலும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இன்றளவும் அரிமளம், திருமயம் பகுதிகளில் ஒரு சில டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஒரு சிலர் டாஸ்மாக் கடையை திறக்க தங்களது விளை நிலங்களை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் எதிர்ப்புக்கு உள்ளான டாஸ்மாக் கடை ஒன்று திருமயம் அருகே உள்ள புதிய கோர்ட் பின்பும் உள்ள கண்மாய் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு திருமயம், சீமானூர், துளையானூர், வாரியப்பட்டி, திருமயம் சமத்துவபுரம், பட்டணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மது பிரியர்கள், இந்த டாஸ்மாக் கடைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடை கண்மாய் பகுதியில் இயங்கி வருவதால் கடையில் மது வாங்கி கொண்டு இரவு, பகல் பாராமல் அருகில் உள்ள கண்மாய் பகுதியில் அமர்ந்து மது அருந்திவிட்ட காலி பாட்டில்களை அங்கேயே ஒரு சிலா விட்டு செல்லும் நிலையில் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் குடித்துவிட்டு காலி மதுபாட்டில் களை கண்மாய் பகுதிக்கும் உடைத்து எறியும் அவலம் அறங்கேறுகிறது. இதனால் அந்த கண்மாய் நாளுக்கு நாள் பட்டில்களால் மாசுபாடு அடைந்து வருகிறது. இது போதாதென்று டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டுச் செல்லும் மது பாட்டில்களை கடை ஊழியர்கள் கண்மாய் கரையில் மழை போல் குவித்து வைத்துள்ளது அப்பகுதி கிராம வாசிகளை எரிச்சலடைய வைத்துள்ளது. தற்போது அப்பகுதியில் பெய்த பருவ மழை காரணமாக பல ஆண்டுகளாக வறண்டுகிடந்த கண்மாய்க்கு தற்போது ஓரளவுக்கு நீர் வந்துள்ளது.

இந்நிலையில் கரையில் குவிந்துள்ள காலி பட்டில்கள், கண்மாய் நீரில் மிதப்பது காண்போரை கலங்க செய்கிறது. மேலும் தற்போது கண்மாயில் நீர் நிரம்பியுள்ளதால் கண்மாய் நீரை கடந்து டாஸ்மாக் கடைக்கு வாடிக்கையாளர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் திரும்பி வரும் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் இரவு நேரங்களில் போதையில் வரும் போது கண்மாய் நீரில் தவறி விழும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் அருகே கண்மாய் பகுதியில் கொட்டப்பட்டுள்ள காலி மதுபாட்டில்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : customer ,shore ,task shop ,
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி