×

தென்னடார் ஊராட்சியில் செயற்கை முறையில் பசுக்களுக்கு கருவூட்டல் திட்ட சிறப்பு முகாம்

வேதாரண்யம், டிச.18: வேதாரண்யம் தாலுகா தென்னடார் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை செயற்கை முறையில் கருவூட்டல் திட்டசிறப்பு முகாம் நடைபெற்றது. பசுக்களுக்கு செயற்கை முறைகருவூட்டல் செய்வது குறைவாக உள்ள மாவட்டங்களில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் நாகை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டைஉள்ளிட்ட 13 மாவட்டங்களில் இத்திட்டம் முதல்கட்டமாக அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் 100 கிராமங்கள் கண்டறியப்பட்டு திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது. இணைய வாயிலாக பசுமாடுகளை கண்காணிக்க இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் தொழில் நுட்பத்துடன் கூடிய தகடுகள் பொருத்தப்பட்ட அட்டை பசுக்களுக்கு காதோலை பொருத்தப்படுகிறது.

மாட்டின் உரிமையாளரது விபரங்கள் செல்போன் போன்ற தகவலுடன் தனிபதிவு எண் அளிக்கப்பட்டு இணைதளத்தில் பதிவிடப்படுகிறது. இதன் மூலம் செயற்கை முறையில் கருவூட்டப்படும் பசுதொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒருமாட்டிற்கு மூன்றுமுறை இலவசமாக வீடுகளுக்கே சென்று கருவூட்டல் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தென்னடார் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பசுக்களுக்கு சிறப்பு அடையாள காதோலை அணிவிக்கப்பட்டு பயனாளியின் ஆதரவுடன் இணையதளத்தில் ஏற்றப்பட்டது. மாடுகளுக்கு சினைபரிசோதனை செய்து தகுதியான மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டலுக்கான ஊசி போடப்பட்டது.முகாமில் தமிழ்நாடுகால் நடைபராமரிப்புத் துறையின் நாகை மண்டல துணை இயக்குநர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் நாவலன், பராமரிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், முரளி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் பசுக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

Tags : Artificial Insemination Project Special Camp for Cows ,Southern Territory ,
× RELATED நாகப்பட்டினத்தில் நீட் தேர்வு 530 மாணவர்கள் எழுதினர்