×

ஊத்துக்கோட்டை பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு: கருத்தடை செய்ய கோரிக்கை

ஊத்துக்கோட்டை, டிச. 18: ஊத்துக்கோட்டை பகுதியில் சாலைகளில் திரியும் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தெருக்களில் சுற்றும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தாராட்சி, பேரண்டூர், பனப்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் இருந்து படித்து வருகிறார்கள்.  இந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது அவர்கள் எடுத்துச் செல்லும் புத்தக பைகளை பார்த்து தெருநாய்கள் குரைக்கிறது.

இதனால் மாணவ - மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு செல்கிறார்கள். இதில் ஒரு சில  தெரு நாய்களுக்கு சொறி பிடித்து பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. மேலும் ஒரு சில நாய்கள் வெறி பிடித்ததில் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி கடித்து விடுகிறது. இந்த தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அனைவரும் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘’ஊத்துக்கோட்டை பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் அச்சத்துடன் சாலையில் நடந்து செல்லவேண்டியுள்ளது. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாய்கடித்ததில் 2 பேர் இறந்து போயுள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நாய்களை பிடித்து சென்று கருத்தடை ஊசி போட்டார்கள். அப்போது ஊத்துக்கோட்டையில் பிடித்த நாய்களை பள்ளிப்பட்டிலும், அங்கு பிடித்த நாய்களை ஊத்துக்கோட்டையிலும் விட்டுவிட்டனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஊத்துக்கோட்டை அரசு பள்ளி எதிரிலும், திருவள்ளூர் சாலை, பஸ் நிலையம் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும்’’ என கூறினர்.

Tags : area ,Udathukottai ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி