×

ஆவடி மாநகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்த ஊழியர்கள்: ஏலம்விட முடிவு

ஆவடி, டிச.18:  தினகரன் செய்தி எதிரொலியாக ஆவடி மாநகராட்சியில் உள்ள தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சியில் ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பதாகை, தண்டுரை, மிட்டனமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக  மாடுகள் செல்வதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் சமீபத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிவந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் மோகன் தலைமையில் ஆய்வாளர்கள் ஜாபர், ரவிச்சந்திரன், பிரகாஷ் ஆகியோர் ஊழியர்களுடன் நேற்று மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்படி, ஆவடி கோவில்பதாகை, திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் சுற்றித்திரிந்த 20 மாடுகளை பிடித்து வார்டு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். பின்னர், மாநகராட்சி நிர்வாகம் அவைகளுக்கு வைக்கோல், புல், புண்ணாக்கு உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகிறது. மேலும், மாட்டு உரிமையாளர்கள் வந்து மாடுகளை கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் அளிப்போம். மேலும், மாடுகளை கேட்காத பட்சத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : streets ,Awadhi Corporation ,
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...