×

50 லட்சம் கடன் பெற்று ஏமாற்றியதால் ஓட்டல் உரிமையாளரை கடத்திய டிராவல்ஸ் நிறுவன அதிபர் கைது

சென்னை, டிச.18: 50 லட்சம் கடனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய ஓட்டல் உரிமையாளரை ஆட்டோவில் நடத்திய டிராவல்ஸ் அதிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை நொளம்பூரை சேர்ந்தவர் சக்திமுருகன் (30), பல்லாவரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது ஓட்டல் வளர்ச்சிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவன அதிபர் பிரபாகரன் (55) என்பவரிடம் 6 மாதங்களுக்கு முன் 50 லட்சம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனுக்கு சக்திமுருகன் முறையாக வட்டி கட்டவில்லை. இதனால் பணத்தை உடனே திரும்ப தர வேண்டும் என்று பிரபாகரன் கூறியுள்ளார். ஆனால், கடனை திருப்பி கொடுக்காமல் சக்திமுருகன் ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் ேநற்று முன்தினம் இரவு சக்திமுருகனை டிராவல்ஸ் அதிபர் பிரபாகரன் தனது அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சக்திமுருகன் வாங்கிய பணத்தை ஒரு வாரத்தில் திரும்ப கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார்.ஆனால், பணத்தை உடனே திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறி, ஒரு ஆட்டோவில் சக்திமுருகனை நொளம்பூர் நோக்கி கடத்தி சென்றார் பிரபாகரன். ஆட்டோ அமைந்தகரை காவல் நிலையம் அருகே செல்லும் போது, திடீரென சக்திமுருகன் தன்னை ஆட்டோவில் கடத்தி செல்வதாக காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு சாலையில் இருந்த பொதுமக்கள் ஆட்டோவை மடக்கி சக்திமுருகனை மீட்டனர். ஆட்டோவில் இருந்த பிரபாகரனையும் பிடித்தனர். தகவலறிந்த அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அப்போது சம்பவம் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால் அமைந்தகரை போலீசார் இருவரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்.

அப்போது, வாங்கிய கடன் 50 லட்சத்தை திருப்பி கொடுக்காததால் ஓட்டல் உரிமையாளர் சக்திமுருகனை டிராவல்ஸ் அதிபர் பிரபாகரன் ஆட்டோவில் கடத்தியது தெரியவந்தது. அதேநேரம், ஓட்டல் உரிமையாளர் இதுபோல் பல இடங்களில் தனது ஓட்டல் பெயரை கூறி 6 பேரிடம் 2.30 கோடி பெற்று மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து டிராவல்ஸ் அதிபர் பிரபாகரன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அதேபோல், 6 பேரிடம் 2.30 கோடி பணத்தை கடன் பெற்று மோசடி செய்ததாக சக்திமுருகனிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறிது நேரம் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : owner ,kidnapping hotel owner ,
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...