×

பொட்டல்புதூரில் மின் இணைப்புடன் பயன்பாட்டுக்கு வந்த சின்டெக்ஸ் தொட்டி

கடையம், டிச. 18: பொட்டல்புதூர் புதுத்தெருவில், தினகரன் செய்தி எதிரொலியாக மின் இணைப்பு அளிக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி பயன்பாட்டுக்கு வந்தது. கடையம் யூனியன் பொட்டல்புதூர் ஊராட்சிக்குட்பட்டது புதுத்தெரு கிராமம். இங்குள்ள வடக்குதெரு, தெற்குதெரு, நடுத்தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் இந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து இங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே தாய் திட்டத்தின் கீழ் 2011-12ல் சிறு முன்விசையுடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வரும் மின்கம்பத்தின் மீது  வாகனம் மோதி  கம்பம் சேதமடைந்து வயர் அறுந்து விழுந்தது.

இந்த விபத்து தொடர்பாக மின்வாரியம் சார்பில் வாகன டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டு புதிய மின்கம்பம் நிறுவப்பட்டது. ஆனால் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய மின் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக தினகரனில் கடந்த 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்ைக மேற்கொண்டனர். உடனடியாக சின்டெக்ஸ் தொட்டியிலும் குடிநீர் ஏற்றப்பட்டு விநியோகிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக காட்சிப்பொருளாக இருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் புதுத்தெரு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Syntex ,
× RELATED திருவேற்காடு அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பரிதாப சாவு