×

உடலுறுப்பு தானத்தை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மாற்றுத்திறனாளி வாலிபருக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

கோவில்பட்டி, டிச. 18: உடலுறுப்பு  தானத்தை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மாற்றுத்திறனாளி வாலிபருக்கு கோவில்பட்டியில்  வரவேற்பு அளிக்கப்பட்டது. மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பொருட்கள்  ஒழிப்பு, உடலுறுப்பு தானம், இயற்கை விவசாயம் பேணல், அரசுப் பள்ளிகளில்  குழந்தைகளைச் சேர்த்தல், தலைக்கவசம் அணிதல், ஆழ்துளை கிணறுகளை மூடுதல்  உள்ளிட்டவை குறித்து ராமநாதபுரம் மாவட்டம், திருநகர் ஆயுதப்படை  குடியிருப்பை சேர்ந்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் விஜயசாமியின் மகனும், முதுநிலை பட்டதாரியும், மாற்றுத்திறனாளியுமான மணிகண்டன் (35) என்பவர், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சைக்கிளில் செல்லும் விழிப்புணர்வு பயணத்தை கடந்த 13ம் தேதி துவக்கினார். இந்நிலையில் கோவில்பட்டி வந்த  அவருக்கு மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், தொழிலதிபர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஜனவரி 1ல் நிறைவு: விழிப்புணர்வு சைக்கிள் பயணம் குறித்து மணிகண்டன் கூறுகையில், ‘‘ இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை ஜனவரி  1ம் தேதி  சென்னை மெரீனா கடற்கரையில் நிறைவு செய்ய உள்ளேன். பின்னர் தமிழக முதல்வர் அனுமதிபெற்று சந்திக்க திட்டமிட்டுள்ளேன். 15 வயதில்  கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட விபத்தில் இடதுகாலை இழந்தேன்.  இருப்பினும் தன்னம்பிக்கையுடன் முதுகலை வணிகவியல் பட்டம், கல்வியியல்  பட்டம், கூட்டுறவு பட்டயபடிப்பு முடித்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத  தயாராகி வருகிறேன்’’ என்றார்.

Tags : bicycle riding alumni ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழாவில் நற்கருணை பவனி