தண்ணீர், அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவிகள் சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டம் போலீசார், தாசில்தார் சமரச பேச்சு

திருச்சி, டிச.16: திருச்சியில் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் தண்ணீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததை கண்டித்து மாணவிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விடுதிக்குள் இரவில் உள்ளிருப்பு போராட்டம் செய்த மாணவிகளிடம் தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி திருச்சி கன்டோன்மென்ட், ரெனால்ட்ஸ் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி உள்ளனர். இந்த விடுதியில் முறையான தண்ணீர் வசதி, கழிப்பறை மற்றும் அடிப்படை வசதி இல்லை, சாப்பாடு சரியில்லை என தொடர்ந்து மாணவியர் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில், விடுதி மோட்டார் பழுதானதால் மாணவியர்களுக்கு தண்ணீர் வழங்கவில்லை. இதனால் மாணவியர் குளிக்கவும், காலைக்கடன்களை முடிக்க முடியாமல் சிரமப்பட்டனர். மாதவிடாய் பிரச்னையால் அவதியடைந்த மாணவியர் வெளியில் தண்ணீர் பாட்டில் வாங்கி தங்களது நிலையை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மாலை வரை தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த மாணவியர் வாளியுடன் நேற்று மாலை 6 மணிக்கு ரெனால்ட்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த செஷன்ஸ் கோர்ட் போலீசார் மற்றும் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் நிலைமை சீராகவில்லை. மறியலை கைவிடும்படி போலீசார் தெரிவித்தனர். போலீசார் வேண்டுகோளை ஏற்று மாணவியர் மறியலை கைவிட்டு, விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் தடைபட்ட போக்குவரத்து சரியானது.

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் திருச்சி மேற்கு தாசில்தார் சத்தியபாமா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மாணவிகளின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக கூறியதையடுத்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு விடுதிக்குள் சென்றனர். இதனால் இரவு 8.30 மணி வரை அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: