×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெம்பக்கோட்டை அணையில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகாசி, டிச. 17: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வெம்பக்கோட்டை அணையில் நீர்மட்டம் 12 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. 21 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர் மூலம் வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 ஆயிரத்து 500 பரப்பில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர அணையில் இருந்து சிவகாசி நகராட்சி பகுதிக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. அணையைச் சுற்றியுள்ள கிராம பகுதியில் கிணற்று பாசனம் மூலமும் விவசாயப் பணிகள் நடைபெறுகின்றன. ஓராண்டு முன்புவரை அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் 10 அடி வரை தண்ணீர் வரத்து வந்தது. இதன் பின்னர் மழை போதிய அளவில் பெய்யவில்லை. அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியது. இதனால், விவசாய பணிகள் பாதிப்படைந்ததன.

இந்நிலையில், மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. இந்த மழைக்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியுள்ளன. வெம்பக்கோட்டை அணை பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளான சங்கரன்கோவில், திருவேங்கடம், மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், அணையின் நீர்மட்டம் 12 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால், அணையை சுற்றிலும் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செவல்பட்டியில் 500 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பணிகள் நடைபெறுகின்றன. வடகிழக்கு பருவ மழை இன்னும் தீவிரமடைந்தால் இருபோக நெல் சாகுபடி பணியில் ஈடுபடலாம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து விவசாயி பரஞ்ஜோதி கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால், விவசாய பணிகள் பாதிப்படைந்தன. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் 12 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனாலும் அணையின் முழு கொள்ளளவை எட்டவில்லை. பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாய பணிகளை முன்னதாகவே துவங்கியுள்ளோம். அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தென்மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம்’ என்றார்.

Tags : areas ,Vembakkottai Dam ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...