சேலம், டிச.17: சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில், தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ் ஆய்வு செய்தார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க, ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, சேலம் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளராக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று சேலம் வந்திருந்த அவர், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வேட்புமனுத்தாக்கல் நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதேபோல், நங்கவள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சூரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்கள் பெறப்படுவதையும், பெரியசோரகை வாக்குச்சாவடி மையத்திற்கும் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, இடைப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் மகுடஞ்சாவடிக்கு சென்ற தேர்தல் பார்வையாளர் காமராஜ், அப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி, வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோரிக்கைகளை தெரிவிக்க அழைப்பு முன்னதாக, அஸ்தம்பட்டியில் உள்ள புதிய கூடுதல் சுற்றுலா மாளிகையில், மாவட்ட கலெக்டர் ராமனுடன், தேர்தல் பார்வையாளர் காமராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது, டிஆர்ஓ திவாகர் மற்றும் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் ஆகியோர் உடனிருந்தனர். சேலம் மாவட்ட பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தங்களது கோரிக்கைகளை தேர்தல் பார்வையாளரின் தொலைபேசி எண்ணாண 98403 77970-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், அஸ்தம்பட்டி புதிய கூடுதல் சுற்றுலா மாளிகை அறை எண் 6-ல் உள்ள முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தும் தெரிவிக்கலாம்.
