×

பாழடைந்த நிலையில் சூரம்பட்டி வணிக வளாகம்

ஈரோடு, டிச. 17:  ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குட்பட்ட வணிக வளாகம் பாழடைந்த நிலையில் உள்ளது. அங்கு புதியதாக 10 அடுக்கு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமாக வணிக வளாகம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் 1981-82ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு கீழ்தளத்தில் 22 கடைகளும், மேல்தளத்தில் வீட்டுவசதி வாரியம், தொழிலாளர் நலத்துறை அலுவலகம், உள்ளூர் திட்டக்குழு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 37 ஆண்டுகள் ஆனநிலையில் கட்டிடம் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. கட்டிடத்தில் பல இடங்களில் மேற்கூரைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் ஆங்காங்கே கட்டிடத்தில் மரங்கள் முளைத்தும், இடிந்தும் உள்ளது. இதை இடித்து விட்டு புதியதாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இங்குள்ள கடைகளை காலி செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து கடைகள் காலி செய்யப்பட்டது.   மேலும் இந்த கட்டிடத்தில் இயங்கி வந்த அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது இங்கு வீட்டு வசதி வாரியம், உள்ளூர் திட்டக்குழும அலுவலகம் மட்டுமே செயல்படுகிறது. இந்த அலுவலகங்களும் விரைவில் காலி செய்யப்படவுள்ளது. அதற்கு பிறகு இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதியதாக 10 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளனர். இதில் முதல் தளத்தில் அலுவலகங்களும் மற்ற 9 தளங்களில் குடியிருப்புகளும் கட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை காலி செய்து விட்டு இடிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 மாத காலத்திற்குள் அனைத்து அலுவலகங்களும் இடிக்கப்படவுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஈரோட்டின் மைய பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வணிக வளாகம் 37 ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிடம் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. அதனால் இதை இடித்து விட்டு இங்கு வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளுக்காக 10 மாடிகள் கட்டப்படவுள்ளது. இது தொடர்பாக உரிய திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நிதியை பெற்று பணிகள் தொடங்க உள்ளதாக கூறினர்.

Tags : Surampatti ,
× RELATED ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் மனைவியை கொன்ற கணவர் போலீசில் சரண்!!