×

பெரியபாளையம் அருகே குட்டையாக மாறிய தொளவேடு கிராம சாலை

ஊத்துக்கோட்டை, டிச. 17:  பெரியபாளையம் அருகே குட்டையாக மாறிய  தொளவேடு கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு செல்வதற்கும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூ, காய்கறி போன்றவற்றை எடுத்து செல்வதற்கும், மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் தொளவேடு கிராம சாலையை பயன்படுத்தி தண்டலம், பாலவாக்கம் செல்கின்றனர். அங்கிருந்து சென்னை,  திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள். இந்நிலையில், தொளவேடு கிராம சாலை குண்டும், குழியுமாக மாறி படுமோசமாக காணப்பட்டது. தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழை நீர் பள்ளங்களில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 5 வருடத்திற்கு முன்பு சாலை அமைத்தனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு கிராம சாலை குண்டும், குழியுமாக மாறி பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், இருசக்கரம், ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகன ஓட்டிகளும், பள்ளி வாகனங்களும் செல்ல  மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் கீழே விழுந்து காயமும் ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து தொளவேடு பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 5 வருடத்திற்கு முன்பு சாலை அமைத்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு  இந்த சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அதை சீரமைக்கவில்லை. மேலும் தற்போது பெய்த மழையால் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்ட முடியவில்லை. எனவே கிராம சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : village road ,Periyapayyam ,hut ,
× RELATED இருளர் குழந்தைகளுக்காக ஒற்றை குடிசைக்குள் இயங்கும் ‘அலை!’