×

பழவேற்காடு பஜார் சாலையில் சிக்னல் இல்லாததால் விபத்துகள் அதிகரிப்பு

பொன்னேரி, டிச. 17: பழவேற்காட்டில் ஏற்பட்டுள்ள வாகன போக்குவரத்து நெரிசலை சீரமைக்க சிக்னல் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள் ளனர். பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு கடலும், ஏரியும் இணையும்  முகத்துவார பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்குள்ள கடற்கரை, மகிமை மாதா திருத்தலம், டச்சு கல்லறை, சின்னப்பள்ளி, நிழல் கடிகாரம், பறவைகள் சரணாலயம்  உள்ளிட்ட பல்வேறு புராதன காட்சிகளை பார்க்க நாள்தோறும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்களும், ஆந்திரா, கேரளாவில் இருந்து ஏராள சுற்றுலா பயணிகளும் கார், வேன், பஸ்களில்  ஏராளமான மக்கள் வாகனங்களில் பழவேற்காடு வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி பழவேற்காட்டில் இருந்து மொத்தமாக மீன், இறால் வகைகளை வாங்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் தமிழகத்தில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வாகனங்களில் வருகின்றனர். இவர்கள் தங்களது வாகனங்களை  பழவேற்காடு பஜார் மற்றும் சுற்றுப்புற சாலையோரங்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது ஒருபுறமிருக்க  சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இயற்கை அழகை காண பழவேற்காடு வருகின்றனர். அவர்கள் வரும் வாகங்கள் கடற்கரையில் நிறுத்திவைக்கின்றனர். ேமலும் சென்னை கோயம்பேட்டில் இருந்தும், செங்குன்றம் உள்பட பல பகுதிகளில் இருந்து  மாநகர பேருந்து மற்றும்  அரசு பேருந்துகளும் பழவேற்காடுக்கு இயக்கப்படுகிறது. இதனால்  பழவேற்காடு பஜார் சாலை மற்றும் பேருந்து நிலையம் அருகே எப்போதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. சாலையை கடக்கும் பாதசாரிகள் அவ்வப்போது விபத்தில் சிக்குகின்றனர்.
வாகன போக்குவரத்தை சீர்படுத்தவும், பாதசாரிகள் அச்சமின்றி சாலையை கடக்கவும் பழவேற்காடு பழவேற்காடு பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்கவும், போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்யவும் பலமுறை வாகன ஓட்டிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்தும் இதுவரை போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படவில்லை. இதனால் கார், வேன், மாநகர பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தாறுமாறாக சென்று வருகின்றன. இதனால் வாகன நெரிசலுக்கு இடையே மக்கள் சாலையை கடக்கும்போது விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக பலரிடையே வாய்த்தகராறும் அடிதடி மோதல்களும் நடைபெறுகின்றன.

இதுதவிர, அங்குள்ள மாநகர பேருந்து நிலையத்தில் பஸ்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு பஜார் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் மாநகர பேருந்துகளில் பல்வேறு பணி காரணமாக செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பிரச்னை குறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அங்கு போக்குவரத்து சிக்னல் மற்றும் போலீசாரை பணியில் அமர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : accidents ,bazaar road ,Pulicat ,
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...