×

உத்திரமேரூர் அருகே புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு 3வது நாள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பு

உத்திரமேரூர், டிச. 17: உத்திரமேரூர் அருகே புதியதாக துவங்கப்பட்ட கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக  தேர்வு, வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் அடுத்த பழவேறி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில்  கடந்த செப்டம்பர் 13ம் தேதி  புதிய கல்குவாரியில் பணியினை தொடங்கினர். தகவலறிந்து கிராம மக்கள் அதை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம், கிராம சபை புறக்கணிப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அலுவலர்களுக்கு கிராம மக்கள் பழவேறி கிராமத்தில் குவாரி அமைந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி புதிய குவாரிக்கு தடைவிதிக்க வலியுறுத்தி வந்தனர்.
 
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று கல்குவாரியில் மீண்டும் மணல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இதையடுத்து கிராம மக்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பழவேறி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கிராம சுடுகாட்டில் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, போராட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள் வகுப்புக்களை புறக்கணித்து, ேதர்வுகள் எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள், “கல்குவாரிக்கு தடைவிதிக்காவிட்டால் நாங்கள் போராட்டத்தை தொடர்வோம்” என வலியுறுத்தினர். பின்னர் தற்காலிகமாக கல்குவாரியினை நிறுத்தி வைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,Uthramerur ,Kalquari ,
× RELATED அர்ஜெண்டினாவில்...