×

குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் கிராமத்தில் குடிசை மாற்று திட்டத்திற்காக ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

ஸ்ரீபெரும்புதூர், டிச. 17: குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் கிராமத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட கடந்த 2010ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்காக சாலமங்கலம் கிராமத்தில் 7 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் 420 வீடுகள் கட்ட தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சுமார் 60க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று சாலமங்கலம் கிராமத்தில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், இடம் தேர்வு செய்யபட்டுள்ள நிலத்தில் கட்டியுள்ள 10 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிதாக கட்டப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் பொதுமக்கள் அதனை ஏற்க மறுத்து, அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணிமங்கலம் போலீசார் பொதுமக்களை சமாதானம் பேசி கலைய செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். முறையாக வீட்டு வரி, குடிநீர், மின் இணைப்பு பெற்று வசித்து வருகிறோம். தற்போது குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உள்ளோம் என்று நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கினர். ஆனாலும் கால அவகாசம் கொடுக்காமல் நேற்று திடீரென வந்த அதிகாரிகள் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கினர். எங்கள் உடமை, பொருட்கள் எடுக்க கூட போதிய அவகாசம் வழங்கவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த அடுக்குமாடி வீடு கட்டும் திட்டம் தற்போது அவசர அவசரமாக நடத்துவதற்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஏற்கனவே நாவலூர் கிராமத்தில் 2000 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டபட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு இன்று வரையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. தற்போது சாலமங்கலம் கிராமத்தில் வீடுகள் கட்ட உள்ளனர். இதற்காக கடந்த 30 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வரும் எங்கள் வீடுகளை அகற்றி, எங்கள் வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளனர்” என்று  இப்பகுதி மக்கள்ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

Tags : Kundathoor Union ,Salamangalam Village ,
× RELATED குன்றத்தூர் ஒன்றியம் எருமையூரில்...