×

தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு தரவேண்டிய 435 சவரன் நகையுடன் கடை அதிபர் ஓட்டம் : போலீசில் புகார்

சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோதிலால் (35). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட பவுஞ்சூர் பகுதியில நகைக்கடை துவங்கினார். அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது கடையில் தீபாவளி சீட்டு உள்ளிட்ட பல்வேறு நகை சீட்டுக்கள் நடத்தியுள்ளார். ஆண்டுதோறும் இவர் தீபாவளிக்கு முந்தைய வாரமே, தன்னிடம் சீட்டு கட்டியவர்களுக்கு நகை, பட்டாசு மற்றும் மளிகை பொருட்களை கொடுத்துவிடுவது வழக்கம். இதனால், ஏராளமானோர் இவரிடம் தீபாவளி சீட்டு கட்டி வந்தனர். அதன்படி, இந்தாண்டு செய்யூர், பவுஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 850க்கும் மேற்பட்டோர் இவரிடம் தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். அவ்வாறு பணம் கட்டியவர்கள், தீபாவளிக்கு முந்தைய நாட்களில், நகை உள்ளிட்ட பொருட்களை கேட்டு, படையெடுத்தனர். அப்போது மோதிலால், பட்டாசு மற்றும் மளிகை பொருட்களை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து விட்டதால், தீபாவளி முடிந்த சில நாட்களில் அரை சவரன் நகையை அனைவருக்கும் கண்டிப்பாக தருவதாக உறுதியளித்துள்ளார். இந்த தீபாவளி சீட்டு மூலம் அவர் பணம் கட்டிய 850 பேருக்கு 435 சவரன் நகைகள் தர வேண்டியிருந்தது. ஆனால், அவர் உறுதியளித்தபடி நகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. இதனால், சீட்டு கட்டியவர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் 9ம் தேதி கல்பாக்கத்துக்கு சென்று தங்க நகைகள் வாங்கி வருவதாக சென்ற மோதிலால் பின்னர் வீடு திரும்பவில்லை. நகைக்கடையும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், மோதிலால் மனைவி சுசிலா அணைக்கட்டு போலீசில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நகை வாங்க சென்ற தனது கணவன் மாயமானதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிலால் குறித்து விசாரித்து வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Shop owner ,jewelery ,ticket holders ,Diwali ,
× RELATED விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி...