×

முத்துப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத ஆய்வு மாளிகையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

முத்துப்பேட்டை, டிச.17: முத்துப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத ஆய்வு மாளிகையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகம் எதிரே பொதுப்பணித்துறை அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த வளாகத்தில் நூறாண்டுகளை கடந்த ஆய்வு மாளிகை இருந்த கட்டிடமும் உள்ளது. இதில் கலெக்டர் மற்றும் முக்கிய அதிகாரிகள் மக்கள்பிரதிநிதிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுக்காக வருகையில் இங்கு தங்கிச்செல்வதுண்டு. பின்னர் இதில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அதிலிருந்து காலி செய்து இங்கு தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. பின்னர் புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடம் மாறி சென்று விட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இயங்கி வந்த ஆய்வு மாளிகைக்கு பதில் கோவிலூர் பைபாஸ் சாலையில் புதிய ஆய்வு மாளிகை கட்டிடம் கட்டி பயனுக்கு வந்துவிட்டது. இதையடுத்து இந்த கட்டிடம் உபயோகத்திற்கு தேவை இல்லை என்பதால் பழமையான இக்கட்டடத்தை பொதுப்பணித்துறையினரும் பராமரிக்காமல் விட்டு விட்டனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எதிரே உள்ள ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் வாகனங்களை இந்த பங்களா உள்ள பகுதியில் நிறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வாகனங்களை நிறுத்த சென்ற சிலர் பார்த்தபோது அங்கு சுமார் 65வயது மதிக்கத்தக்க ஒருவர் காக்கி கலர் சட்டை, காவி நிற வேஷ்டி அணிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் யார்? எப்படி இறந்தார்? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் இந்த பங்களா குறித்து அதிகாரிகள் மத்தியில் பலமுறை எடுத்து கூறியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஒருவர் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்ப்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறைதான் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : mansion ,
× RELATED சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75...