×

மார்த்தாண்டம் நகை கடை கொள்ளையில் 2 பேர் சிக்கினர்

மார்த்தாண்டம், டிச. 17: மார்த்தாண்டத்தில்  பரபரப்பை ஏற்படுத்திய 140 பவுன் நகை கொள்ளையில் 2 பேரை பிடித்து தனிப்படை  போலீசார் ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.  குமாரபுரம் பகுதியை சேர்ந்த ஜாண் கிறிஸ்டோபர்(46)என்பவர்  மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக  ஜூவல்லரி நடத்தி வருகிறார். ஜூவல்லரியின் பின் பகுதியிலேயே அவரது வீடும்  உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை நகை  கடைக்குள் புகுந்த கொள்ளையன் சுமார் 170 பவுன் நகைகளை கொள்ளையடித்தான். ஜாண் கிறிஸ்டோபர் மனைவி பார்த்ததையடுத்து கொள்ளையன் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்தான். அப்போது 30 பவுன் நகை கீழே  விழுந்து விட்டது. இந்த  சம்பவம் தொடர்பாக  மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல்  கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்து நகை கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.  இது  தொடர்பாக ஜூவல்லரிக்கு அருகில் உள்ள ஒருவரை போலீசார் பிடித்து  விசாரித்தனர். பின்னர் அவருக்கும், இந்த கொள்ளைக்கும் தொடர்பு இல்லை என்பது  தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். இதற்கிடையே  கொள்ளையனை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கர், விஜயன் ஆகியோர்  தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொள்ளையன் கடைக்குள்  செல்வதற்கு முன்பு அல்லது தப்பி செல்லும் போது செல்போன் பயன்படுத்தி  இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே கொள்ளை நடந்த இடத்தில்  குறிப்பிட்ட நேரத்தில், 50 மீட்டர் சுற்றளவில் ஏதாவது செல்போன்கள் இயங்கி  உள்ளதா? என்று போலீசார் பரிசோதிக்க உள்ளனர். இதற்காக நெல்லையில் இருந்து  பிரத்யேக கருவி வருகிறது. இதில் கண்டுபிடிக்கப்படும் செல்போன்  எண்களை வைத்து ேபாலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தனிப்படை போலீசாரின் பிடியில்  தற்போது 2 பேர் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இருவரையும் ரகசிய இடத்தில்  வைத்து தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல்கள்  வெளியாகி உள்ளன.இது தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் கேட்டபோது, ‘கொள்ளையனை  நெருங்கி விட்டோம் என்றனர்.

Tags : jewelery shop robbery ,
× RELATED 3 நகை கடை கொள்ளையில் துப்பு...