×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு நாகர்கோவில், தக்கலையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.17: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில், தக்கலையில் இன்று (17ம் தேதி) திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவரின் அறிவிப்பிற்கு இணங்க டிசம்பர் 17ம் தேதி செவ்வாய்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு எனது (என்.சுரேஷ்ராஜன்) தலைமையில் சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, சம உரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் தகர்த்துள்ள மத்திய பா.ஜ அரசுக்கு துணை நின்று சிறுபான்மையினர் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் அதிமுக அரசும், மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவும், இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதா வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

எனவே இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜ அரசு சமீபத்தில் திருத்தி இயற்றியுள்ள இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. இது நாட்டில் குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை வரைமுறையாகக் கொண்டிருக்கிறது. இந்த திருத்தத்தின்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தானிலிருந்து 2014 டிசம்பர் 31க்கு முன்பு வந்திருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் அல்லது கிறிஸ்தவர்கள் சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்து வந்தவர்களாகக் கருத்தப்பட மாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு மேல் வசித்திருந்தால் இயற்கையாகவே இந்தியக் குடியுரிமை பெற தகுதி படைத்தவர்களாக முடியும். குடிமக்களாவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 11  ஆண்டுகளுக்கு குறையாது வசித்திட வேண்டும் என்று  இருந்து வந்த  கால வரையறையை இச்சட்டத்திருத்தம் தளர்த்தியிருக்கிறது.

இந்த திருத்தம் இம்மூன்று நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்கு வந்துள்ள முஸ்லிம்களுக்குப் மட்டும் பொருந்தாது. அவர்கள் இப்போதும் சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்து வந்தவர்களாகவே கருதப்படுவார்கள். மதத்தின் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ள பாகுபாடுதான், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான ஒன்றாகவும், சட்ட விரோதமான ஒன்றாகவும் ஆக்குகிறது. இந்த பாரபட்சமான சட்ட திருத்தத்தை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து கட்சிகளும் வலுவாக எதிர்த்து வரும் நிலையில், அதிமுக, பாஜகவோடு கரம்கோர்த்து நிற்கிறது. இதனை கண்டித்து 17.12.2019 (இன்று) தக்கலை போஸ்ட் ஆபீஸ் முன்பு காலை 10 மணிக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இப்போராட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் யாவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,protests ,Nagercoil ,Takalai ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது