×

குமரியில் லாட்டரி வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை பாயுமா? மாதந்தோறும் வசூல் வேட்டை நடத்தியது அம்பலம்

நாகர்கோவில், டிச.17: குமரி மாவட்டத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனையாளர்களிடம் இருந்து மாமூல் வாங்கிய போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரியால் பாதிக்கப்பட்ட வாலிபர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர்  வெளியிட்டு இருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் எப்படியாவது  3 நம்பர் சீட்டு லாட்டரி முறையை ஒழியுங்கள் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து 3 நம்பர் லாட்டரி டிக்கெட் பற்றிய விவாதங்கள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அண்டை மாநிலங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை உண்டு. குறிப்பாக கேரளாவில் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. தினமும் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு முடிவுகள் ஆன்லைனில் வருகின்றன. இதில் கேரளாவில் முதல் பரிசு விழக்கூடிய லாட்டரி டிக்கெட் எண்ணின் கடைசி 3 நம்பரை அடிப்படையாக வைத்து நிகழ்வது தான் 3  நம்பர் லாட்டரி. அந்த கடைசி 3 நம்பர், கடையில் வாங்கும் துண்டு சீட்டில் இருந்தால் ₹20 ஆயிரம், ₹40 ஆயிரம் என பரிசு வழங்கப்படுகிறது. பெட்டிக்கடைகள், குளிர்பான கடைகள், டீக்கடைகளில் இது போன்று துண்டு சீட்டில் நம்பர் எழுதி கொடுக்கும் விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களை அந்தந்த லாட்டரி புக்கிங் ஏஜெண்டுகள் நியமித்து கமிஷன் கொடுக்கிறார்கள். ஒரு துண்டு சீட்டின் விலை ₹50 வரை விற்பனை ஆகிறது.

குமரி மாவட்டத்திலும் 3 நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்றது. விழுப்புரம் சம்பவத்தை தொடர்ந்து, எஸ்.பி. நாத் உத்தரவின் பேரில் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் 3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையாளர்களை போலீசார் தேடி பிடித்து கைது செய்து வருகிறார்கள். இந்த வழக்கில் கைதானால் பெரிய அளவில் தண்டனை இல்லை. உடனடியாக ஜாமீனில் வந்து விடலாம். இதனால் இதில் தொடர்பு உடையவர்களை போலீஸ் பிடித்து சென்றாலும் கூட, அவர்கள் உடனடியாக வெளியே வந்து விடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் யார், யார் விற்பனையாளர்கள் என்ற பெயரில் போலீஸ் தயாரித்த பட்டியலில் 15 பேர் விவரங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் தான் மாவட்டம் முழுவதும் புரோக்கர்களை நியமித்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. பல முக்கிய பிரமுகர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். போலீஸ் தேடுதல் வேட்டையை தொடர்ந்து இவர்களில் பலர் தலைமறைவாகி உள்ளனர்.
இதற்கிடையே காவல்துறையில் உள்ள சிலர், 3 நம்பர் லாட்டரி விற்பனைக்கு பேருதவி செய்துள்ளனர். இதற்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மாமூல் வசூலித்து உள்ளனர்.

இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார் சிலர் மாதம் தவறாமல் மாமூல் வாங்கி உள்ளனர். அவரவர் பொறுப்புக்கு ஏற்கனவே ₹15 ஆயிரம், ₹20 ஆயிரம் என மாமூல் தொகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெயரளவுக்கு அவ்வப்போது வழக்கு போடுவது போல் கணக்கு காட்டி இருந்தாலும் கூட, 3  நம்பர் விற்பனையை போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். தற்போது கைது நடவடிக்கையை தொடர்ந்து, மாமூல் வாங்கிய போலீசார் பற்றிய விவரங்களும் சேரிக்கப்படுகிறது. இது தொடர்பாக எஸ்.பி.க்கு நேரடியாகவே பலர் புகார்களை அனுப்பி வருகிறார்கள்.  இது போன்ற  போலீசார்,  மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும், தேர்தலுக்கு பின் இது பற்றி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உண்டு என காவல்துறை தரப்பில் கூறி உள்ளனர்.

Tags : Mamool ,lottery dealers ,Kumari ,Ambalam ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து