×

கழுகாசலமூர்த்தி கோயிலில் 5வது சோமவார விழா கோலாகலம் கழுகுமலையில் பால்குட ஊர்வலம்

கழுகுமலை, டிச. 17: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் 5வது சோமவார விழாவையொட்டி பால்குட ஊர்வலம் விமரிசையாக நடந்தது. இதில்பக்தர்கள் திரளாகப் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 தென் பழநி என பக்தர்களால் போற்றப்படும் தூத்துக்குடி மாவட்டம். கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும் இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அத்துடன் குமரவேட்கு பாலாபிஷேகம் என்ற பெயரில் பால்குட ஊர்வலமும் நடைபெறுவது வழக்கம். இதன்படி கார்த்திகை மாத 5வது மற்றும் கடைசி சோமவார விழா கோலாகலமாக நேற்று  நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை அம்பாளை எழுந்தருளச்செய்து பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு மேல் சுப்பிரமணியருக்கு  சிறப்பு பூஜையும், கந்த ஹோமமும் நடந்தது. இதைத்தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 10.15 மணிக்கு டக்கு ரத வீதி அலங்கார பந்தலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து கிரிவலம் வந்து கழுகாசலமூர்த்தி கோயிலை சென்றடைந்தனர். நண்பகல் 12 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் முதலான பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரத்திற்கு பிறகு மஹா தீபாராதனை நடந்தது.
இதை கழுகுமலை மற்றும் சுற்று வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருமளவில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தரிசித்தனர். இதையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பேரூராட்சி மன்ற முன்னாள்  தலைவர் சுப்பிரமணியன், தொழிலதிபர் பழனி, தலைமை எழுத்தர் செண்பகராஜ், பரமசிவம் என திரளானோர் கலந்து கொண்டனர்.
 ஏற்பாடுகளை வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.


Tags : 5th Somavara Ceremony ,Elligasalamoorthy Temple ,
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை