×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை, டிச.17: திருவண்ணாமலை மாவட்டத்தில் ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்யும் பணி துவங்கியுள்ளது. நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும் பிப்ரவரி 20ம் தேதி கடைசிநாள் என வேளாண்மை இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2019-20ம் ஆண்டிற்கான ராபி பருவத்திற்கான பயிர்க் காப்பீடு தொடங்கியுள்ளது. நெல் பயிர் காப்பீட்டு தொகையாக ஒரு ஏக்கருக்கு ₹416 வரும் பிப்ரவரி 20ம் தேதிக்குள்ளும், உளுந்து பயிருக்கு ₹236 வரும் ஜனவரி 31ம் தேதிக்குள்ளும், நிலக்கடலைக்கு ₹360 வரும் ஜனவரி 16ம் தேதிக்குள்ளும், கரும்பு பயிருக்கு ₹2,600 அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை செலுத்தலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு ஓரியண்டல் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படும். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், பொது சேவை மையங்கள் மூலம் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு செய்ய பட்டா, சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Rabi Season ,Thiruvannamalai District ,
× RELATED வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை...