×

சாரல் மழைக்கே குண்டும், குழி விருதுநகரில் நிரந்‘தரம்’ இல்லாத சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

விருதுநகர், டிச. 16: விருதுநகரில் உள்ள பாவாலி ரோடு, ஏஏ ரோடுகள் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சமும் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில், நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போட கூட நிதியில்லாத நிலையில், நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. ஆனால், நகராட்சிக்கு வரும் நிதிகளில் ரோடு போடும் பணிக்கு மட்டும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஒப்பந்ததாரர்களின் போட்டியில் போடப்படும் சாலைகள் தரமற்ற வகையில் போடப்படுவதால், சாரல் மழைக்கு கூட சாலைகள் தாக்குபிடிப்பதில்லை. புதிதாக போடப்படும் சாலைகள் ஓராண்டு பயன்பாட்டிற்கு வந்தால் அது சாதனையாக கருதப்படுகிறது. நகரில் உள்ள பாவாலி ரோடு, ஏஏ ரோடு, புல்லாலக்கோட்டை ரோடு, ராமமூர்த்தி ரோடு உள்பட பல சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.பாவாலி ரோட்டில் மாவட்ட நூலகம் துவங்கி நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளி வரையிலான 300 மீ தூரம் பல ஆண்டுகளாக குண்டும், குழியாக இருக்கிறது. இந்த சாலை வழியாக நகருக்குள் வரும் பஸ்கள் பழைய பஸ்  நிலையம் செல்கிறது.
சிவகாசி, சாத்தூர் செல்லும் கனரக வாகனங்கள், வேன்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் பாவாலி ரோடு வழியாகச் செல்கிறது.

இதில், 300 மீ தூரச் சாலை பழுதடைந்துள்ளது. இந்த ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளியில் 500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்திற்கு மின்கட்டணம் செலுத்த தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். பாவாலி சாலையில் மின்வாரிய அலுவலகம், நகராட்சி பள்ளிக்கு இடையே உள்ள ஓடை மீது கட்டப்பட்ட பாலம் உடைந்து மெகா பள்ளமாக கிடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சிவகாசியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் சாய்ந்தது, பயணிகள் பத்திரமாக இறக்கி மாற்று பேருந்தில் அனுப்பப்பட்டனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து பேராலி ரோடு வரையிலான ஏஏ ரோடு கடந்த பல ஆண்டுகளாக குழிகளாக காட்சி தருகின்றன. இந்த சாலையில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல்கள் உடைந்து கிடக்கின்றன. ஏஏ ரோட்டில் நூற்பாலைகள் மற்றும் பேராலி ரோட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினசரி நூற்றுக்கான கன்டெய்னர் லாரிகள், பேராலி செல்லும் அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்லும் போது பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. எனவே, நகராட்சி நிர்வாகம் நகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை தரமாக போடுவதற்கு உரிய நிதியை அரசிடம் இருந்து பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Roads ,pit road ,Pithoragarh ,
× RELATED வீட்டை பூட்டி மருமகள் சாவியை...