×

அரசு மருத்துவமனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க 80 திட்ட வரைபடம்

ஈரோடு,  டிச. 16:  ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பில் புதிதாக ரவுண்டானா அமைக்க பொதுமக்கள்  சார்பில் 80 திட்ட வரைபடம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் புதிதாக  மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு தமிழக முதல்வரால் திறந்து  வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தினால் 50சதவீத போக்குவரத்து நெரிசல் மட்டுமே  கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், ஈரோடு அரசு மருத்துவமனை  சந்திப்பில் பிரப் ரோடு, ஈ.வி.என் ரோடு, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு,  நசியனூர் ரோடு என 5 ரோடுகள் இணையும் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து  நெரிசல் அதிகரித்து வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் துறை சார்பில் அரசு மருத்துவமனை சந்திப்பில் தற்போது தற்காலிக ரவுண்டான அமைக்கப்பட்டு, போக்குவரத்து போலீசார்,  ஆயுதப்படை போலீசார் மூலம் வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி  வருகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனை சந்திப்பில்  தற்காலிக ரவுண்டானாவிற்கு  நிரந்தர தீர்வாக, மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தில் புதிய ரவுண்டானா அமைக்க முடிவு செய்தது.

 புதிய ரவுண்டானா அமைப்பதற்கு  மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட காவல் துறை  சார்பில், ரவுண்டான அமைக்க திட்ட வரைபடத்தை பொதுமக்கள் தயாரித்து  வழங்கலாம் எனவும், சிறந்த திட்டத்திற்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டது. இதன்பேரில், அரசு மருத்துவமனை சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்க  ஈரோடு மக்கள் சார்பாக 80 திட்ட வரைபடங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
 இது குறித்து  ஈரோடு எஸ்.பி. சக்திகணேசன் கூறுகையில், ‘‘ஈரோட்டின் மையப்பகுதியில் ரவுண்டானா  அமைய உள்ளது. இது வெறும் ரவுண்டானாவாக மட்டும் அல்லாமல் பெயர் சொல்லும்  இடமாக அமைய வேண்டும். அந்த ரவுண்டானாவில் விளம்பரதாரர்களின் விளம்பரங்கள்  இல்லாமல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய  வேண்டும் என்பதற்காக திட்ட வரைபடம் அனுப்ப மக்களிடம் அறிவித்தோம். தற்போது  வரை 80 திட்ட வரைபடங்கள் வந்துள்ளது. அதில், சில திட்டங்கள் சிறப்பாக  உள்ளது. சிறந்த திட்டத்தை தேர்வு செய்து, மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு  ரவுண்டானா அமைக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ரவுண்டானா  அமைக்கும் பணிகள் துவங்கப்படும்,’’ என்றார்.

Tags : Set Roundabout ,Government Hospital Meeting ,
× RELATED அரசு மருத்துவமனை சந்திப்பில் உதவும்...