×

காரைக்குடியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தரமற்ற அரிசி விநியோகம் வாங்க மறுக்கும் பொதுமக்கள்

காரைக்குடி, டிச. 13: கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி ஓபன் மார்க்கெட்டில் ரூ.45க்கு விற்பனை செய்யப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி  தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 140 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள்  மூலம் 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி,  சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, கோதுமை போன்றவை வழங்கப்படுகிறது.  கூட்டுறவுத்துறை மூலம் என்ஜிஓ காலனி, சிக்ரி, பர்மாகாலனி, அண்ணாசிலை அருகே  சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் செயல்படுகிறது. இங்கு ரேசன் பொருட்களை தவிர டீ தூள்,  சோப்பு, அரிசி உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெளி  மார்க்கெட்டை விட தரம் நிறைவாக, விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக  இந்த விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு விற்பனை  செய்யப்படும் பொருட்களை மக்கள் விரும்பி வாங்காத நிலையே தொடர்கிறது. ரேசன்  பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் கட்டாயப்படுத்தி இப்பொருட்களை விற்பனை  செய்ய வேண்டிய கட்டாயத்தில் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த  சிறப்பு அங்காடிகளில் கிலோ ரூ.45க்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த  அரிசி தரமில்லாமல் ஒருவித மோசமான வாசனை வருவதாகவும், அரிசி பெரிய அளவில்  இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து என்ஜிஓ காலனி  ஆதிஜெகநாதன் கூறுகையில், ‘வெளி மார்க்கெட்டை விட அதிக விலையில்  சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தரம் இல்லை. 25  கிலோ அரிசி பைகளை ஒரு கடைக்கு 15 முதல் 25 மூடைகளை கட்டாயம் விற்பனை செய்ய  வேண்டும் என இறக்கி வைத்துவிட்டு செல்கின்றனர். தரமில்லாமல் இருப்பதால்  மக்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் கடை பணியாளர்களே கைகாசை தர வேண்டிய  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கமிஷனுக்காக இதுபோன்ற தரமற்ற அரிசியை கடைகளுக்கு  விற்பனைக்கு அனுப்புகின்றனர்’ என்றார்.

Tags : Public ,Karaikudi ,Co-operative Specialty Store ,
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்