×

பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் கட்டிய கோயில் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை

தண்டையார்பேட்டை: பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அம்மன் கோயிலை, நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்களில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, அமைக்கப்பட்ட பழைய நடைபாதைகள் பல இடங்களில் சிதிலமடைந்துள்ளதால், அவற்றை அகற்றவிட்டு, பெரிய அளவிலான நடைபாதைகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது.

இவ்வாறு அமைக்கப்பட்ட நடைபாதைகளை பலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். சாலையோர கடைகளில் பார்க்கிங் வசதி இல்லாததால், நடைபாதையை வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், பாதசாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதுஒருபுறம் இருக்க சென்னையின் பல முக்கிய சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஆங்காங்கே சிறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த கோயில்களில் திருவிழா நடத்தும்போது, போக்குவரத்து ஸ்தம்பித்து வாகன ஓட்டிகள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்களை அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை, ஆர்மோனியன் தெரு சந்திப்பில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓம்சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. சாலையோரத்தில் கோயில் இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை கடந்த மாதம் 19ம் தேதி நீதிமன்றம் விசாரித்து, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கோயிலை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதன்படி நேற்று காலை 5வது மண்டல அதிகாரி லாரன்ஸ் தலைமையில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து மேற்கண்ட கோயிலை அகற்றினர். தகவலறிந்து அப்பகுதியில் பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலை இடித்தவுடன் இடிபாடுகளும் அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டது.

'ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்'
தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள பொது கழிப்பறை முன், கடந்த சில வருடங்களுக்கு முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால் அந்த டெண்டரை எடுத்தவர், அந்த இடத்தில் ஒரு பகுதியில் சிறிய அளவில் மட்டுமே வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, இதர இடத்தில் 50க்கும்  மேற்பட்ட பழ கடைகளை வாடகைக்கு விட்டிருந்தார். இதனால் மேற்கு தாம்பரம் முத்துரங்க முதலி தெருவில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையாராஜா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

Tags : sidewalk ,NSC Bose Road ,Barimunai ,
× RELATED ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்