×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்யலாம்?


புதுக்கோட்டை, டிச.13: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக  எவ்வளவு ரூபாய் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் நடைபெறும். குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.முதல் கட்ட தேர்தல்:அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்றண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

2ம் கட்ட தேர்தல்: புதுக்கோட்டை, அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மனமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு வரும் 30ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 22 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 225 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 3 ஆயிரத்து 807 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 29 ஆயிரத்து 828 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 10 லட்சத்து 57 ஆயிரத்து 835 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராடசி ஒன்றியங்களிலும் 2 ஆயிரத்து 301 வாக்குச்சாவடி மையங்களை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடக்கது.

வைப்புத்தொகை
(டெபாசிட்): தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது வைப்புத் தொகையாக கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.100, இதர பிரிவினர் ரூ.200, கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.300, இதர பிரிவினர் ரூ.600, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.300, இதர பிரிவினர் ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.500, இதர பிரிவினர் ரூ.1000, வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.
வேட்பாளர் செலவு:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகப்பட்ச செலவுத்தொகை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவுகளை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தொகைக்கு மேல் செலவு செய்யப்பட்டு இருந்தால் அந்த வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...