×

அகற்றிய வேகத்தடையை மீண்டும் அமைக்காவிட்டால் சாலை மறியல் கிராம மக்கள் முடிவு

கொள்ளிடம், டிச.13: கொள்ளிடம் அருகே எருக்கூரில் தேசிய நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்காவிட்டால் சாலை மறியல் போரட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்கூரில் அடிக்கடி விபத்துகள் நடந்ததையொட்டி கிராம மக்கள் சார்பில் வைத்த கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறையால் எருக்கூர் பஸ்நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி கவர்னர் வருகையொட்டி, வேகத்தடை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அதே இடத்தில் இரண்டு நாட்களில் அமைத்து தருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையின் நாகப்பட்டினம் உதவி செயற்பொறியாளர் உறுதியளித்தும் இதுநாள் வரை வேகத்தடை அமைக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் எருக்கூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசேகரன் கூறுகையில், கடந்த நவம்பர் மாதம் அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் உடனடியாக அமைத்து தருவதாக அதிகாரிகள் வாக்குறுதியளித்தும் இதுநாள் வரை அமைத்து தரவில்லை. கடந்த 6ம்தேதி பால் ஏற்றி வந்த ஒரு லாரி எருக்கூரில் விபத்துக்குள்ளானதற்கு வேகத்தடை இல்லாததே காரணமாகும். அதிகாரிகள் சொன்னது போல் வேக்கத்தடை அகற்றப்பட்ட இடத்தில் இதுவரை வேகத்தடையை மீண்டும் அமைக்கவில்லை. இன்னும் மூன்று நாட்களில் எருக்கூரில் வேகத்தடையை மீண்டும் அமைக்கத் தவறினால் நூற்றுக்கணக்கான கிராம மக்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி