×

வியட்நாம், சீன ஆடைகளை வாங்கி குவிக்கும் உள்நாட்டு வியாபாரிகள்

திருப்பூர், டிச.13: இந்தியாவில் பஞ்சு தட்டுப்பாடு, அடிக்கடி நூல் விலையேற்றம் ஆகிய காரணங்களால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பனியன், ஜட்டி, டி-சர்ட் உட்பட பல்வேறு ஆடைகளின் விலைகளை சிறிய அளவில் படிப்படியாக அதிகரித்து வந்தனர். தற்போல் பஞ்சு தட்டுப்பாட்டை காரணம் காட்டி பஞ்சாலைகள் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஆடைகளின் விலைகளை அதிகமாக அதிகரிக்காமல் சிறுக, சிறுக அதிகரித்து தங்களுடைய செலவுகளை குறைத்து வந்தனர். தற்போது, ஜி.எஸ்.டி., இ-வே பில், பணமில்லா வர்த்தகம் ஆகியவற்றால் அனைத்து பணம் பரிவர்த்தனையும்  வங்கிகள் மூலம் நடக்கிறது. இதனால், பின்னலாடை நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்து வரவு குறைந்ததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் போதிய லாபம் இன்றி தவித்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு ரூ.26 ஆயிரம் கோடிக்கு பி்ன்னலாடை ஏற்றுமதி செய்தனர். தற்போது ரூ.23 ஆயிரம் கோடி மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளனர். வியட்நாம், வங்கதேசம், சீனா, பாக்கிஸ்தான், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் துணிகளுக்கு சாயமிடும்போது வெளியேறும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் கடலில் கலக்க செய்கின்றனர். இதனால், சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் தொகை மிச்சமாக உள்ளது. இதனால், உலக நாடுகளுக்கு இந்திய ஆடைகளை விட குறைவான விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

30 கோடி மக்கள் தொகை உள்ள வியாட்நாம் நாடு கடந்த ஆண்டு ரூ.இரண்டு லட்சம் கோடிக்கு மேல் ஆடைகள் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிலிருந்து  ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  திருப்பூரில் சாய ஆலை, உரிமையாளர்கள் ரூ.70 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து 50க்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து , சாயக்கழிவு நீரிலுள்ள அமிலம், கலர் ஆகியவற்றை நீக்கும் மூலப்பொருள் கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவாகிறது. இதனால், துணிகளுக்கு சாயமிடும் தொகையை அதிகரித்துள்ளனர்.பின்னலாடை உற்பத்தியாளர்கள் விலைகளை சிறிது அதிகரித்துள்ளனர். இந்நிலையில் வியட்நாம், சீனா ஆகிய நாடுகள் வங்கதேசம் வழியாக எந்த வரியும் செலுத்தாமல் இந்தியாவில் பல கோடி மதிப்புள்ள பின்னலாடைகளை இந்திய வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ளனர். இதனால், பின்னலாடை  உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இது குறித்து பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:- இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தொழில் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். பஞ்சு, நூல் ஆகியவை அடிக்கடி விலையேற்றம், ஜி.எஸ்.டி. வரியால் பல்வேறு பொருட்களின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு தவறாக போனது. மூலப்பொருட்கள் விலை உயர்வு, பில் இல்லாமல் வியாபாரம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சம்பளம் அதிகரிப்பு, மின் கட்டணம், தேய்மானத்செலவு, நவீன இயந்தரங்கள் கொள்முதல் உட்பட பல்வேறு காரணங்களால் செலவுகள் அதிகரித்துள்ளது. பின்னலாடைகளின் விலையை  அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்நிலையில் வியட்நாம், சீனாவை சேர்ந்த ஆடைகளை வங்கதேசம் வழியாக எந்த வித வரியும் இன்றி உள்நாட்டு வியாபாரிகள் கோடிக்கணக்கில் ஆடைகளை இறக்குமதி செய்கின்றனர். இந்திய அரசு உள்நாட்டு பின்னலாடை விலைக்கு இணையாக வரிகளை நிர்ணயம் செய்து வசூலிக்கவேண்டும். இல்லையெனில் இந்தியாவிற்குள் உள்நாட்டு விற்பனை பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : merchants ,Vietnamese ,Chinese ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...