×

பெரணமல்லூரில் பரபரப்பு அரசு பஸ் வராததை கண்டித்து பொதுமக்கள் மறியல்

பெரணமல்லூர், டிச.13: பெரணமல்லூரில் அரசு பஸ் சரிவர வராமல், தடம் மாறி இயங்குதை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தனியார் கம்பெனியில் பணிபுரிபவர்கள் அதிகம். இவர்கள் அதிகாலையில் பணிக்கு செல்ல பெரணமல்லூர் வழியே செல்லும் அரசு பஸ் தடம் எண் 110, 247ல் பயணிக்கின்றனர். இதில் தடம் எண் 247 சில மாதங்களாக இயக்கப்படாமல் அதிகாரிகள் தடம் மாற்றி இயக்கி வருகின்றனர். இதனால் தடம் எண் 110ஐ நம்பி பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த பஸ்சும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி தடம் மாறி இயங்கி வருவதால் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், நேற்று தடம் எண் 110 பஸ் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காலை 11 மணியளவில் திடீரென அங்குள்ள சிவன் கோயில் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘தடம் எண் 110 பஸ் அடிக்கடி தடம் மாறி இயக்கப்படுவதால், குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை. அடுத்த பஸ் எங்களுக்கு ஆறு மணிக்கு மேல் வருவதால் கம்பெனிக்கு செல்ல முடியாமல் அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரணமல்லூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அதிகாரிகள், அதிகாலை செல்லும் அரசு பஸ் தவறாமல் தினமும் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : bus stops ,Peranamallur ,
× RELATED ₹10 கோடி மதிப்பு வளர்ச்சி திட்ட பணிகளை...