×

தூத்துக்குடி மாவட்டத்தில் 1363 பேர் மனுத் தாக்கல்

தூத்துக்குடி, டிச. 13:  தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 1363 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், 174 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், 403 ஊராட்சித் தலைவர், 2943 கிராம ஊராட்சிக் குழு உறுப்பினர் என மொத்தம் 3537 பதவிகளுக்கான தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கியது. முதல் நாளில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 10 பேர், கிராம ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 103 பேர் என மொத்தம் 113 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 2ம் நாளில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 20 பேர், கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 40 பேர் என மொத்தம் 63 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 3வது நாளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒருவர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 16 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 211 பேர், கிராம ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 229 பேர் என மொத்தம் 457 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் 4வது நாளான நேற்று (13ம் தேதி) மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 பேர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 42 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 218 பேர், கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 467 பேர் என மொத்தம் 730 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் இதுவரை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 4 பேர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 61 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 459 பேர், கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 839 பேர் என மொத்தம் 1363 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே வேட்புமனுக்களை நாளையும் (14ம் தேதி) தாக்கல் செய்யலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். சாத்தான்குளம்:  சாத்தான்குளம் ஒன்றியத்தில் 4வது நாளாக நேற்றும் வேட்புமனு தாக்கல் நடந்தது.  மனுதாக்கல் செய்ய வருபவர்கள் ஏராளமான வாகனங்களில் தங்கள்  ஆதரவாளர்களுடன்  வந்தனர். இதனால் சாத்தான்குளம்- இட்டமொழி சாலையில்  அனைத்து வாகனங்களும் அணி வகுத்து நின்றன. அதிமுக வேட்பாளர்களும் நேற்று  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதில் 2வது வார்டில்  முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மேரிபொன்மலர், 4வது வார்டில் ஜெயா, 6வது  வார்டில் லதா, 8வது வார்டில் முன்னாள் முதலூர் ஊரட்சித் தலைவரும்,  முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மீனாமுருகேசன், உள்ளிட்ட 14பேர்களும்  வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்  பதவிக்கு அதிமுக வேட்பாளர் தேவவிண்ணரசி, முதலூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு  முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பொன்முருகேசன், அரசூர் ஊராட்சித்  தலைவர் பதவிக்கு அந்தோணி சேவியர், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு  முன்னாள் தலைவர் பாலமேனன் உள்ளிட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு 23பேர்களும்,  கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 34பேரும் மனுதாக்கல்  செய்தனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 72பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக  வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின் போது அதிமுக ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு  சவுந்திரபாண்டி, ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவபாண்டியன், நடுவக்குறிச்சி  முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆனந்தகுமார், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

புதுக்கோட்டை: கூட்டுடன்காடு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பூப்பிராட்டி, சத்தியா உள்ளிட்டோர் வேட்புமனுதாக்கல் செய்தனர். கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக பெல்சிட்டா, அன்னசெல்வி, தேவ கிருபை கிரேனப் பிரமிளா வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முத்துசாமி, வின்சென்ட் ஆகியோரும், குலையன்கரிசல் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பூ மல்லிகா, தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுப்புராஜ், சென்னப்பன், பாலசுப்பிரமணியன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். அல்லிக்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சின்னம்மாள், அய்யனடைப்பு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆதிலட்சுமி, ஞானசெல்வ சுந்தரி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சங்கரபாண்டி மனு தாக்கல் செய்தார். இதற்கான மனுக்களை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிதம்பரம், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுடலை முன்னிலையில் தாக்கல் செய்தனர். இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கல்யாணசுந்தரம், பிரம்மநாயகம், தங்கசெல்வி, பாலசுப்பிரமணியன், ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பானு, செல்வக்குமார் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

Tags : petitioners ,Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...