×

பண்ருட்டி அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து 5 லட்சம் பொருட்கள் சேதம்

பண்ருட்டி, டிச. 13: பண்ருட்டி அருகே நேற்று அதிகாலை அருகருகே உள்ள அண்ணன், தம்பி வீடுகள் தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகை, வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ மேலும் பரவாமல் தீயணைப்பு படையினர் தடுத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பண்ருட்டி அருகே எலவத்தடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன்கள் சீனுவாசன் (45), திருவேங்கடம் (37). இவர்கள் அருகருகே உள்ள கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவரது குடும்பத்தினரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சீனுவாசனின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி உயிர் தப்பினர். இதையடுத்து தீ பக்கத்தில் வசித்து வரும் திருவேங்கடத்தின் வீட்டுக்கும் பரவியது.

அவரும், அவரது குடும்பத்தினரும் தப்பி வெளியே ஓடி வந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு தீயை அணைக்க முயன்ற போதும் முடியாததால் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். இதில் 2 வீடுகளிலும் இருந்த டி.வி, மர பீரோ, நாற்காலிகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 3 பவுன் நகைகள், துணிமணிகள், வீட்டு பத்திரங்கள், ரேசன் கார்டுகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. சீனுவாசன் வீட்டில் ரூ.80 ஆயிரம் பணமும், அவரது தம்பி திருவேங்கடம் வீட்டில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும் ரொக்கப்பணம் எரிந்து சாம்பலானது. மொத்த சேதமதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். தீவிபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அண்ணன், தம்பி வீடு தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள், பொருட்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Panruti ,roof houses ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு