×

காவிரி கரையில் கடும் துர்நாற்றம் மேட்டூர் உபரிநீர் போக்கியில் நுண்ணுயிரி கலவை தெளிப்பு

மேட்டூர், டிச.12:மேட்டூர் காவிரி கரையில், தண்ணீர் பச்சை நிறமாக மாறி கடும் துர்நாற்றம் வீசுவதால் போராட்டம் நடத்த பொதுமக்கள் திட்டமிட்டனர். இதையறிந்த அதிகாரிகள் நேற்று அணையின் உபரிநீர் போக்கியில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிரி கலவையை தெளித்தனர். மேட்டூர் அணை 60 சதுரமைல் பரப்பளவு கொண்டது. கடந்த ஒரு மாதமாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடியாக உள்ளதால், கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அணை நீர் பச்சை நிறமாக மாறி, காவிரி கரையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடும் துர்நாற்றத்தால் சேலம், தர்மபுரி மாவட்ட காவிரி கரையோர மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் சேலம் கலெக்டர் ராமன் பண்ணவாடி, காவேரிபுரம் மற்றும் கோட்டையூர் பகுதிகளில் நேரடி ஆய்வு செய்தார். ஆய்வில், அப்பகுதி விவசாயிகள் அணை நீர்மட்டம் குறையும்போது அப்பகுதியில் விவசாயம் செய்து ரசாயன உரங்கள் தெளிப்பதால், தண்ணீர் பச்சை நிறமாக மாறி படலங்கள் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து, துர்நாற்றத்தை போக்க திறனூட்டப்பட்ட நுண்ணுயிரி கலவை தெளிக்கப்பட்டது. நீர்த்தேக்க பரப்பு முழுவதும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இப்பணிகள் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்த நிலையில், பொதுப்பணித்துறை, வேளாண்துறை, மீன்வளத்துறை மற்றும் மேட்டூர் நகராட்சி அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் அதிகளவில் தேங்கிய பச்சை மற்றும் நீலநிற படலங்களால் தங்கமாபுரிபட்டணம், சேலம் கேம்ப் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதியடைந்தனர். நுண்ணுயிரி கலவை தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நேற்று முன்தினம் மேட்டூர் சப் கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்த தங்கமாபுரிபட்டணம் பகுதி மக்கள் போராட்டத்திற்கு தயாராகினர்.

இதையறிந்த அதிகாரிகள், நேற்று மாலை மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியில் மருத்து கலவை தெளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மேட்டூர் நீர்தேக்கம், உபரிநீர் போக்கி பகுதி முழுவதும் அதிகளவில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிரி கலவை தெளித்தால் மட்டுமே துர்நாற்றத்தை போக்க முடியும். நுண்ணுயிர் கலவை தெளிக்காவிட்டால், மேட்டூர் நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பல கி.மீ தூரத்திற்கு துர்நாற்றம் வீசும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்,’ என்றனர்.

Tags : shore ,Cauvery ,Mettur ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி