×

பொருளாதாரத்தை காக்கும் காந்தி ஆசிரம கிராமிய தொழில்கள்

திருச்செங்கோடு, டிச.12: மத்திய  அரசின் ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித்  தவிக்கும் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு, தமிழக அரசு தேவையான  நிதியுதவி அளித்து, ஆசிரமப் பணிகள் தொய்வின்றி நடக்க உதவ வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
வலிமையான கிராமியப் பொருளாதாரமே, நாட்டின் முதுகெலும்பு என்பதை, கிராமியத் தொழில்கள் மூலம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் வலியுறுத்தி வருகிறது. உள்ளூர் மூலப்பொருட்களை கொண்டு உள்ளூர் மக்களால் உற்பத்தி செய்யப்பட்டு, உள்ளூர் மக்களால் வாங்கப்படுவதே, கிராமியத் தொழில்  பொருளாதாரமாகும். இதனை திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் செவ்வனே செய்து வருகிறது. வேலை இல்லாத் திண்டாட்டம், இதன் மூலம் அகற்றப்படுகிறது. 1925ம் ஆண்டு பிப்ரவரி 6ம்தேதி, இதனை மூதறிஞர் ராஜாஜி நிறுவினார். இதற்கான நிலத்தை ரத்தினசபாபதி என்ற ஜமீன்தார் இலவசமாக வழங்கினார். வேலைவாய்ப்பின்றி கங்காணிகள் மூலம் இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று இன்னல்படும் மக்களை தடுத்து, அவர்களுக்கு பஞ்சை கொடுத்து நூற்க  செய்து, நூலை காந்தி ஆசிரமம் வாங்கிக் கொண்டது. இதனால், அப்போது பல்லாயிரக்கணக்கானோர் பசி, பட்டினியில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

காந்தி ஆசிரமத்தை துவக்கி வைத்தவர் தந்தை பெரியார் என்பது சுவாரசியமான செய்தியாகும். இலவங்காய் உடைத்தல், கதர் தயாரித்தல், ஊதுபத்தி செய்தல், இலவம்பஞ்சு கொண்டு மெத்தை, தலையணை தயாரித்தல் போன்ற கிராமியத் தொழில்கள் மூலம்  ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். உள்ளூர் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர்   கிராமியத் தொழில்கள் மூலம் பொருள் ஈட்டி சொந்தக்காலில் நிறகின்றனர். காந்தி ஆசிரமத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படுகிறது. ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்று காந்தியடிகள் கூறினார். அதனை மெய்ப்பித்து வருகிறது திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாசறையாகவும், மது ஒழிப்பின் மையமாகவும் செயல்பட்ட காந்தி ஆசிரம கொள்கைகளை பரப்ப, மூதறிஞர் ராஜாஜி,
இந்த ஆசிரமத்தில்  சுமார் 10 ஆண்டுகள் தங்கி சேவை செய்தார். இங்குள்ள 10 அடிக்கு 10 அடி உள்ள அறையில் தங்கி வாழ்ந்த ராஜாஜி, பின்னாளில் நூற்றுக்கணக்கான அறைகள் கொண்ட ராஜ்பவனில் கவர்னர் ஜெனரலாக வீற்றிருந்தார். மதுவை ஒழிக்க, மாட்டு வண்டியில் பெட்ரோமேக்ஸ் லைட்டுகளுடன் கிராமம் கிராமமாக சென்று ராஜாஜி பிரசாரம் செய்தார். இங்கு டிபானே என்ற ஆங்கிலப் பெண் மருத்துவரால், தொழுநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேரு, காந்தி, வல்லபாய் படேல் போன்ற  தேசத்தலைவர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். இங்கு வருகை தந்த காந்தியடிகள், சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்ட கொடிக்கம்பம் புனிதமாக போற்றப்படுகிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், தறபோது மத்திய  அரசின் ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது. எனவே, காந்தி ஆசிரமத்திற்கு தமிழக அரசு தேவைப்படும் நிதியுதவி அளித்து, ஆசிரமப் பணிகள் தொய்வின்றி நடக்க உதவ வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Gandhi ,
× RELATED கிண்டி, அம்பத்தூர் உட்பட17...