×

கண்டமனூர் பகுதியில் கம்பளிப்புழு படையெடுப்பால் முருங்கை விவசாயம் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு, டிச.12: கண்டமனூர் பகுதியில் கோவிந்த நகரம், லட்சுமிபுரம், அண்ணாநகர், ஆத்தங்கரைபட்டி, துரைச்சாமிபுரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை,அய்யனார் கோவில், கொம்புகாரன்புலியூர், பாலூத்து, தேவராஜ்நகர் போன்ற பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முருங்கை விவசாயம் நடைபெறுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக முருங்கை விவசாயத்தில் கம்பளிப்புழு தாக்கியது. இதனால் முருங்கை விவசாயம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் கம்பளிப்புழு தாக்குதல் முருங்கையில் அதிக அளவில் உள்ளது. இதற்காக கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும், முருங்கை விவசாயத்தைப் பாதுகாப்பதில் மிகவும் சிக்கல் நிலவி வருகிறது. எனவே, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பூச்சிமருந்து, உரம் போன்றவை மானிய அடிப்படையில் வழங்கினால் விவசாயத்தை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர். கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த விவசாயி குமார் கூறுகையில், ``முருங்கை விவசாயம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு பொருளாதாரச்செலவு அதிகம் ஏற்படுகிறது. தற்போது முருங்கைக்காய் விலை உயர்ந்த நிலையில், முருங்கை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வேளாண்மை துறை சார்பாக உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை மானிய அடிப்படையில் வழங்க வேண்டும். மேலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கு தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது