×

‘கண்டமாகும்’ குருவிக்காரன் பாலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 515 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

மதுரை, டிச.12: மதுரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் 515 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் வினய் தெரிவித்தார். மதுரை மாவட்ட கலெக்டர் வினய் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தற்போது வரை 3 நாட்களாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இத்தேர்தலுக்காக மாவட்டத்தில் மொத்தம் 2,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 515 கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் அதேபோல் குடிநீர், மின்சாரம், சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் 16,560 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு முதல் முறையாக கம்ப்யூட்டர் மூலம் ரேண்டம் செய்து, வாக்குச்சாவடிக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு வரும் சனிக்கிழமை முதல் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். அடுத்து 20ம் தேதியும் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

தேர்தல் வேட்பு மனு தாக்கல் பாதுகாப்புக்காக மொத்தம் 780 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், வாகன சோதனை நடத்தவும், 2 யூனியனுக்கு ஒரு பறக்கும்படை என, 8 மணி நேரத்திற்கு ஒரு ஷிப்ட்டாக கணக்கிட்டு 3 ஷிப்டில் பறக்கும்படை குழுவினர் பணியாற்றுவர். தேர்தல் தொடர்பாக புகார் மற்றும் ஏதேனும் தேர்தல் சந்தேகங்கள் இருந்தால் பொதுமக்கள் இலவச தொலைபேசி எண் 18005992123 மூலம் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். அதே போன்று வாட்ஸ்அப் எண்: 73395 32527 மூலமும் புகார் கொடுக்கலாம். இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பணியாளர்கள் இருந்து புகாரை பெற்று அதற்கு பதில் கூறுவார்கள். புகார் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : body elections ,
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாஜக...