×

அதிகாரிகள் அலட்சியத்தால் கனமழை பெய்தும் காய்ந்து கிடக்கும் கண்மாய்மெட்டுக்குண்டு கிராம விவசாயிகள் புகார்

விருதுநகர், டிச. 12: விருதுநகர் அருகே, அதிகாரிகளின் அலட்சியத்தால் மெட்டுக்குண்டு கிராம கண்மாய் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமம் உள்ளது. சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள பெரிய கண்மாய் மூலம், இரு போகம் விவசாயம் செய்தனர். சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். பெரிய கண்மாய் நிறைந்து, அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள கண்மாய்க்கு செல்லும். இந்நிலையில், தற்போது பெய்த மழையால் கூட, நிரம்பாமல் கண்மாய் வறண்டு கிடக்கிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என கூறுகின்றனர். மழைக்காலத்திற்கு முன்பு, நீர்வரத்துக் கால்வாய்களை மராமத்து பார்க்கவில்லை. எனவே, விவசாயிகளின் நலன் கருதி நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைத்து, பெரிய கண்மாயில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘எங்க கண்மாயில் நீர்நிரம்பினால் விவசாயம் நடைபெறும். 20 ஆண்டுகளாக விவசாயம் மெல்ல மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. கண்மாய்க்கு மழை நீர் வரும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். கிராம மக்களின் நீன்ட கால கோரிக்கையான கண்மாய்க்கு தண்ணீர் வரும் தடுப்பணையை சீரமைக்க மனு கொடுத்தோம். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயம் செய்யமுடியாமல் தவிக்கின்றோம். எனவே, குடிமராமத்து திட்டம் மூலம் வரத்துக்கால்வாய் பராமரிப்பு, தடுப்பணைகள் சீரமைப்பு பணிகளை நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு