×

மாவட்டத்தில் தேர்தல் நடக்கும் இடங்களில் கொடிக்கம்பம், சுவரொட்டி அகற்ற உத்தரவு

ஊட்டி, டிச.12: நீலகிரி  மாவட்டத்தில் தேர்தல் நடக்கும் இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின்  கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள் மற்றும் வாசகங்கள் அகற்றப்பட வேண்டும் என  அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.  ஊட்டியில்  உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தொடர்பான அனைத்து கட்சி  கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை  வகித்து பேசுகையில் கூறியதாவது:
தமிழகத்தில் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி  பகுதிகளுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 6 மாவட்ட  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 35 கிராம  ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 493  உறுப்பினர்கள் நேரடி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக  குன்னூர் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 27ம் தேதி 177  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 17 கிராம ஊராட்சி தலைவர், 22  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 2 மாவட்ட ஊராட்சி வார்டு  உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இரண்டாம் கட்டமாக 30ம்  தேதி ஊட்டி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 216 கிராம  ஊராட்சி வார்டு உறுப்பினர், 18 கிராம ஊராட்சித் தலைவர், 37 ஊராட்சி ஒன்றிய  வார்டு உறுப்பினர் மற்றும் 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய  பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம்  தேதி துவங்கியது. 16ம் தேதி மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.  வேட்பு மனு 17ம் தேதி பரிசீலனை செய்யப்படும். 19ம் தேதி வேட்புமனுக்களை  திரும்ப பெறலாம். தேர்தல் பணிகள் ஜனவரி 4ம் தேதிக்கும் முடியும். வெற்றி  பெற்ற வேட்பாளர்களின் முதல் கூட்டம் வரும் ஜனவரி 6ம் தேதி நடக்கும். 11ம்  தேதி மறைமுகத் தேர்தல் நடக்கும். தேர்தலுக்கான நன்னடத்தை விதி தொகுப்பு  தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அமுலில் இருக்கும். எந்த ஒரு  அரசியல் கட்சி அல்லது வேட்பாளரும் சாதி, மதி மற்றும் இன உணர்வுகளை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்யக்கூடாது. மாவட்டத்தில் தேர்தல் நடக்கும் இடங்களில் உள்ள அரசியல்  கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள் மற்றும் வாசகங்கள் அகற்ற  வேண்டும்.  தேர்தல் பிரச்சாரத்திற்கு  காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனுமதி பெறாமல் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அனுமதி பெறாமல்  பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தக்கூடாது. வாக்குச்சாவடியில் இருந்து  200 மீட்டர் தொலைவிற்குள் எந்த வேட்பாளரும் முகாம் அமைக்க கூடாது.  
வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாள  சீட்டுக்களில் சின்னமோ அல்லது வேட்பாளரின் பெயரோ இருத்தல் கூடாது. எந்த  அரசியல் பிரமுகர்களும் உள்ளாட்சி கட்டிடங்கள், அலுவலகங்கள் எவையும் அரசியல்  நடவடிக்கைக்காக பயன்படுத்தக்கூடாது.

வேட்புமனுக்கள் தாக்கல்  செய்யப்படும் நேரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்தில் இருந்து  200 மீட்டர் தொலைவிற்கு 3 வாகனங்களை மட்டுமே பயன்படுத்த  வேண்டும். மேலும் பிரசார  பணிகளுக்கு அணிவகுத்து செல்லும்போது 3  வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. தேசிய மற்றும் மாநில அரசியல்  கட்சிகளின் தலைவர்கள் பயன்படுத்துவதற்கான வாகனங்களக்கு முன் அனுமதி மாவட்ட  தேர்தல் அலுவலராலேயே வழங்கப்படும். படக்காட்சி வாகனங்கள் இயக்கப்பட்டால் மோட்டார் வாகன சட்டத்திற்குட்பட்டு இருத்தல் வேண்டும்.  வாக்குப்பதிவு முடிவதற்கென நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு 48 மணி  நேரத்திற்கு முன்னதாக தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வரும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவலர் நிர்மலா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : polling places ,district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...