×

ஆவுடையார்கோவில் பகுதியில் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் மருந்துக்கும் கட்டுப்படவில்லை

அறந்தாங்கி, டிச.12: ஆவுடையார்கோவில் பகுதியில் டீலக்ஸ் பொன்னி சாகுபடியில் குலைநோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆந்திர மாநில வரவான டீலக்ஸ் பொன்னி எனப்படும் பிபிடி 5204 என்ற ரக நெல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்படுகிறது. வறட்சியை தாங்கும் தன்மை, உயர் விளைச்சல், நல்ல விலை போன்ற காரணங்களால் விவசாயிகள் டீலக்ஸ் பொன்னி ரக நெல்லை விரும்பி பயிரிட்டு வருகின்றனர். டீலக்ஸ் பொன்னி ரக நெல் பயிரை வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் குலை நோய் தாக்கும். ஆவுடையார் கோவில் பகுதியில் பிராந்தனி, கருங்காடு, பாண்டிபத்திரம், பூவலூர் பகுதியில் டீலக்ஸ் பொன்னி நெற்பயிர் கதிர் வெளிவந்துள்ள நிலையில் குலை நோய் தாக்கியுள்ளது. இதுகுறித்து பாண்டிபத்திரம் பகுதி விவசாயிகள் கூறியது: கடந்த பல ஆண்டுகளாக மழை பொய்த்ததால் சாகுபடி செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு மழை பெய்ததால் கடன் வாங்கி டீலக்ஸ் பொன்னி நெல்லை நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்தோம். கடந்த மாதம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் நெற்பயிரை குலை நோய் தாக்கியுள்ளது. எவ்வளவு மருந்து தெளித்தாலும் நோய் கட்டுப்படவில்லை இவ்வாறு அவர்கள் கூறினர்.எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்ற உதவுவதோடு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Oudayarikovil ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது