×

மாநகரில் விபத்தை ஏற்படுத்தும் குழிகள்

திருப்பூர், டிச. 12:  திருப்பூர் மாநகரில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்காக 3 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சாலையோரம் குடிநீர் குழாய்கள் நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீரை பிரித்து அனுப்புவதற்காக சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே வால்வுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த வால்வுகளை திறந்து விட்டால்தான் அந்த பகுதிக்கு குடிநீர் செல்லும்.  இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு மாநகரில் பல்வேறு சாலைகள் குறுகிய சாலைகளாக இருந்தன. குறிப்பாக அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் மிகவும் குறுகலாக இருந்தன. இதில் மங்கலம் சாலை தவிர பிற சாலைகள் விரிவுபடுத்தப்பட்டன. இதில் சாலை  விரிவுபடுத்தப்பட்டதால் சாலையோரம் இருந்த குடிநீர் குழாய்கள் தற்போது சாலையின் நடுப்பகுதியில் அமைந்துவிட்டன. இவ்வாறு மாநகரில் உள்ள பிரதான சாலைகளில் நூற்றுக்கணக்கான குடிநீர் குழாய் வால்வு அமைந்துள்ளதால், அந்த இடத்தில் தார்சாலையின் நடுவே சிறிய குழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகளில் சிறிய குழிகள் இருப்பது தெரிவதில்லை. சில இடங்களில் அந்த குழிகளை சுற்றி தார்சாலை அரித்து பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகி உள்ளன.

  குறிப்பாக திருப்பூர் அவிநாசி ரோட்டில் பங்களா பஸ் நிறுத்தம் முதல் திருமுருகன்பூண்டி வரை அதிகளவில் பள்ளங்கள் உள்ளன. அரிசி கடை வீதி, முருங்கபாளையம், கொங்கு மெயின் ரோடு, தாராபுரம் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் இதே நிலைதான் தொடர்கின்றன. இவ்வாறு நடுரோட்டில் சிறிய குழிகள் மற்றும் பள்ளங்கள் இருப்பது இரவு நேரங்களில் சரிவர தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்துக்கு ஆளாகின்றனர். இதனால் வாகனங்கள் பழுதடைவதுடன், சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே விபத்து ஏற்படுத்தும் இந்த குழிகளை மூடி, குடிநீர் குழாய் வால்வுகளை சாலையோரம் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : metropolis ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில்...