×

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி குமரி ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு

நாகர்கோவில், டிச.12:  உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால், குமரியில் ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்படுகிறது. தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் 27ம் தேதி திருவட்டார், மேல்புறம், குருந்தன்கோடு, தக்கலை, ராஜாக்கமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், 30ம் தேதி அகஸ்தீஸ்வரம், முன்சிறை, தோவாளை, கிள்ளியூர் ஆகிய ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக கண்காணிக்கும் வகையில், மாவட்ட காவல்துறை  சார்பில், இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்கு சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் போன்ற கணக்கெடுப்புகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதே போல் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் ரவுடிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர்.

கொலை வழக்குகளில் கைதாகி தற்போது ஜாமீனில் இருந்து வரும் ரவுடிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் சில ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பிரிவு 110 ன் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, இவர்களை ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தி நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்படுகிறது. அதில் எந்த வித குற்ற சம்பவங்களிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கப்படுகிறது. இதை மீறி இவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், 2 வருடம் வரை ஜாமீனில் வர முடியாத படி சிறை தண்டனை விதிக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர். பல ரவுடிகள் தற்போது ஆர்.டி.ஓ. முன் ஆஜராகி வருகிறார்கள்.

Tags : Kumari Rowdies ,
× RELATED கன்னியாகுமரி மீனவர் குஜராத் கடலில் மாயம்