×

லண்டனில் இருந்து பேசுவதாக ஏமாற்றி குமரி எலக்ட்ரீசியனிடம் 15 லட்சம் மோசடி

நாகர்கோவில், டிச.12:  லண்டனில் இருந்து வேலை வாங்கி தருவதாக கூறி, குமரியை சேர்ந்த எலக்ட்ரீசியனிடம் 15 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது. இந்த அதிர்ச்சியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள தையாலுமூடு விராலிவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபா. இவரது மொபைல் போனுக்கு வாலிபர் ஒருவர் போன் செய்து, ஆங்கிலத்தில் பேசினார். இவருக்கு ஆங்கிலம் தெரியாததால் பக்கத்து வீட்டை சேர்ந்த ஆல்பர்ட் சிசில் என்பவரின் மனைவி ஜெகாஜினியிடம் போனை ெகாடுத்தார். அவரும் தனக்கு ஆங்கிலம் தெரியாது என கூறி கணவர் ஆல்பர்ட் சிசிலிடம் போனை கொடுத்தார். இவர் நன்றாக ஆங்கிலம் பேசக் கூடியவர். ஏற்கனவே வெளிநாடுகளில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி உள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர் தனது பெயர் பிராங்க் ஜாண் என்றும், லண்டனில் இருந்து பேசுவதாகவும் கூறினார். அவரிடம் ஆல்பர்ட் சிசில் தன்னை பற்றிய விபரங்களை கூறி, தனக்கு சரிவர வேலை இல்லை என்றும், தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பதாகவும் கூறினார்.

அப்போது பிராங்க் ஜாண், லண்டனுக்கு வர விசா எடுத்து வேலை வாங்கி தருகிறேன். உங்களுக்கு தேவையான மருத்துவ செலவுகளுக்கு என்னால் முடிந்த பண உதவிகளை செய்கிறேன் என கூறி, ஆல்பர்ட் சிசிலின் மொபைல் எண்ணை வாங்கினார். பின்னர் அவரது மொபைல் போனை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். லண்டனில் இருந்து பரிசுப்பொருட்கள் அனுப்பி வைத்திருப்பதாக கூறுவார்.திடீரென ஒரு நாள் ஆல்பர்ட் சிசிலின்  வாட்ஸ் அப் எண்ணுக்கு சில பரிசு பொருட்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்து, இந்த பரிசு பொருள் டெல்லியில் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி ெகாண்டது. அதற்காக ₹30ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும். அந்த அபராத தொகையை நான் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்பி வையுங்கள் என்றார். இதை நம்பி 30ஆயிரத்தை ஆல்பர்ட் சிசில் அனுப்பினார். பின்னர் அவ்வப்போது பணம் அனுப்பி வைக்குமாறு கூறுவார். இதை நம்பி பிராங்க் ஜாண் கூறிய வங்கி கணக்கிற்கு ஆல்பர்ட் சிசில் பணத்தை அனுப்பினார். இவ்வாறு பல தவணைகளில் 15 லட்சத்து 85 ஆயிரம் வரை அனுப்பி உள்ளார். ஆனால் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பரிசு பொருட்களும் வரவில்லை. பின்னர் பிராங்க் ஜாண் போனை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டது, ஆல்பர்ட் சிசிலுக்கு தெரிய வந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆல்பர்ட் சிசில் மனைவி ஜெகாஜினி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாத்திடம் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு எஸ்.பி. உத்தரவிட்டார். இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தாமஸ் லைசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிராங்க் ஜாண் என்பவர் போனில் தெரிவித்த லண்டன் முகவரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் இந்த பிராங்க் ஜாண். உண்மையில் அவர் லண்டனில் தான் உள்ளாரா? அவருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். பிராங்க் ஜாண் செல்போன் நம்பர், வங்கி கணக்கு எண் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Tags : Kumari Electrician ,London ,
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...