ஜோலார்பேட்டை அருகே வீட்டின் முன்பு கடை விரித்து கள்ளச்சாராயம் விற்பனை வெகுஜோர்

வேலூர், டிச.12: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வீட்டு முன்பு கடை விரித்து 24 மணி நேரம் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரின் சுற்றுப்புற கிராமங்களிலும், ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும், நாட்றம்பள்ளி, ஏலகிரி, பச்சூர், வெலக்கல்நத்தம், புதுப்பேட்டை, கந்திலி என பரவலாக கள்ளச்சாராயமும், டாஸ்மாக் சரக்கும் 24 மணி நேரமும் தடையின்றி கிடைப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக பத்திரிகைகளில் படங்களுடன் செய்தி வெளியானாலும் காவல்துறை இவ்விஷயத்தில் கண்மூடி மவுனம் காக்கிறது.

குறிப்பாக கள்ளச்சாராய விற்பனைக்கு காவல்துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாகவும், இதற்காக மாதந்தோறும் கள்ளச்சாராய வியாபாரிகளிடமும், டாஸ்மாக் சரக்கை கள்ளச்சந்தையில் விற்கும் வியாபாரிகளிடமும் மாமூல் பெற்றுக் கொள்வதாகவும் பொதுமக்கள் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதற்கேற்ப ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கிராமத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை தனது வீட்டின் முன்பே குவித்து வைத்து 24 மணி நேரமும் சர்வசாதாரணமாக விற்பனை செய்து வருகிறார் ஒருவர்.

ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் 20 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறதாம். சின்னமூக்கனூர், பாச்சல், அச்சமங்கலம், காந்தி நகர், ஆசிரியர் நகர் உட்பட ஜோலார்பேட்டை மற்றும் தாமலேரிமுத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்து கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு செல்கின்றனராம். அதேபோல் வாட்ஸ்அப், மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தாலும் மொத்தமாக ஆர்டர் பெற்று டோர்டெலிவரியும் செய்யப்படுகிறதாம். ஏற்கனவே சின்னமூக்கனூர் கிராம மக்கள் இதுதொடர்பாக உள்ளூர் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல் புகார் பெற்ற மறுநிமிடமே சம்பந்தப்பட்ட நபரிடம் வந்து மாமூல் பெற்று சென்ற சம்பவம்தான் பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி வட்டாரங்களில் விற்பனையாகும் கள்ளச்சாராயம் அண்டை மாநிலமான ஆந்திரம், தருமபுரி மாவட்ட எல்லை கிராமங்கள், புதூர்நாடு பகுதிகளில் இருந்து காய்ச்சி இப்பகுதிகளுக்கு கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சின்னமூக்கனூரை சேர்ந்த கிராம மக்களிடம் கேட்டபோது, ‘எங்கள் பகுதியில் 24 மணி நேரமும் டாஸ்மாக் மது பாட்டில்கள் தாராளமாக கிடைக்கிறது. அதேபோல் தாமலேரிமுத்தூரில் ஒருவர் அவரது வீட்டின் முன்பே கடைவிரித்து பாக்கெட் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்கிறார். அதோடு அவருக்கு சுற்றுவட்டார கிராமங்களிலும் கிளைகள் உண்டு. புதர் மறைவிலும், ரயில்வே தண்டவாளங்களின் ஓரங்களிலும் அவரது ஆட்கள் பாக்கெட் சாராயத்தை கொண்டு வந்து விற்கின்றனர். இவர்களுக்கு கள்ளச்சாராயம் ஆந்திர எல்லையோர கிராமங்கள், தருமபுரி மாவட்ட கிராமங்கள், புதூர் நாடு மலை கிராமங்களில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி கடத்தி வரப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களையும், டாஸ்மாக் சரக்கை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களையும் தட்டிக்கேட்பவர்களிடம், ‘எங்களை ஒன்றும் செய்ய முடியாது. எங்களிடம் காவல்துறையே எங்களிடம் பணத்தை பெற்று செல்கின்றனர். நாங்கள் சொல்வதைத்தான் போலீஸ் செய்யும்’ என்று பதில் கூறுகின்றனர். கள்ளச்சாராய ஆசாமிகளுக்கும், டாஸ்மாக் சரக்குகளை கள்ளச்சந்தையில் விற்பவர்களுக்கும் காவல்துறையே நண்பனாக செயல்படுகிறது. பொதுமக்களுக்கு நண்பராக இருக்க வேண்டியவர்கள் சமூக விரோதிகளுக்கு நண்பனாக இருக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட எஸ்பியும் எங்கள் பகுதியில் கள்ளச்சாராய விற்பனைக்கும், கள்ளச்சந்தையில் டாஸ்மாக் சரக்கு விற்பனைக்கும் முற்றுப்புள்ளி வைக்க உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>