×

சீட்டம்பட்டு அரசு பள்ளியில் கட்டிடம் பழுதால் வகுப்பறையாக மாறிய தலைமை ஆசிரியர் அறை

கலசபாக்கம், டிச.12: கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு அரசு பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதால், மாணவர்கள் தலைமை ஆசிரியர் அறையில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சீட்டம்பட்டு, படியம்புத்தூர், பெரியகல்லந்தல் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் மழைக்காலங்களில் மேற்கூரை வழியாக தண்ணீர் கசிந்து, வகுப்பறையில் தேங்கி நிற்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் தலைமை ஆசிரியர் அறையில் அமர்ந்து படிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதுதவிர, போதிய இடவசதி இல்லாததால் அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே இடத்தில் அமர வைத்து பாடம் நடத்துகின்றனர். எனவே, பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும், பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்து.

Tags : building ,classroom ,headmaster ,Seetampattu Government School ,room ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...