×

எகிப்து நாட்டிலிருந்து தஞ்சைக்கு 2 டன் வெங்காயம் வந்தது வாங்குவதற்கு ஆர்வம் காட்டாத மக்கள்

தஞ்சை, டிச. 11: தஞ்சைக்கு மத்திய அரசு மூலம் எகிப்து நாட்டிலிருந்து 2 டன் வெங்காயம் வந்து சேர்ந்தது. இதை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையானது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயம் வாங்க இயலாமல் தவித்தனர். தற்போது வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்து வருகிறது.இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தில் தற்போது 2 டன் தஞ்சைக்கு வந்து சேர்ந்தது. இந்த வெங்காயம் தற்போது தஞ்சை காமராஜ் காய்கறி மொத்த விற்பனை சந்தைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது பெரிய அளவிலும், இளஞ்சிவப்பு நிறமாகவும் இருந்தது. வெங்காயம் கிலோ ரூ.110 என விற்பனை செய்தாலும் பொதுமக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

இதுகுறித்து வெங்காய மொத்த வியாபாரி சிதம்பரம் கூறும்போது, எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது தஞ்சைக்கு முதல்கட்டமாக 2 டன் வந்துள்ளது. நமது நாட்டு வெங்காயத்துடன் ஒப்பிடும்போது இதன் காரத்தன்மை குறைவாக உள்ளது. மேலும் உரிக்க உரிக்க தோள் அதிகமாக வருகிறது. இதனால் நமது நாட்டு வெங்காயத்தைவிட விலை குறைவாக இருந்தாலும் மக்கள் எகிப்து வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் எகிப்து வெங்காயத்தை ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அதே நேரத்தில் நமது நாட்டு வெங்காயத்தை விலை சற்று கூடுதலாக இருந்தாலும் வாங்கி செல்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் வரத்து துவங்கி விட்டது. அடுத்த வாரத்தில் இது வந்து சேர்ந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Tags : Egypt ,
× RELATED கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்