×

கோத்தகிரி அருகே சாலையில் பிளவு மண், நீர் வள விஞ்ஞானிகள் ஆய்வு

ஊட்டி, டிச. 11: கோத்தகிரி அருகே கரிக்கையூர், மெட்டுக்கல் பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ள பகுதியில் இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பரவலாக கன மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலையோரங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. கீழ் கோத்தகிரி அடுத்த சோலூர் மட்டத்திலிருந்து கரிக்கையூர், பங்களா பாடி போன்ற பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் மெட்டுக்கல் பகுதியில் 150 மீட்டர் நீளத்திற்கும், 5 அடி ஆழத்திற்குள் பூமியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கரிக்கையூர் செல்லும் சாலையிலும் பிளவு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த மரம், தேயிலை, காப்பி செடிகள், பாறைகள் உள்ளிட்ட அனைத்தும் சரிந்துள்ளது. அத்துடன் கரிக்கையூர், மெட்டுக்கல், பங்களா பாடி உள்ளிட்ட 5 பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

மழை காரணமாக ஏற்பட்டுள்ள பூமி பிளவால் இப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். புவியியல் துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.   இது குறித்து ஊட்டியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர்வள ஆய்வு மையம் விஞ்ஞானிகள் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். பாதுகாப்பு கருதி இச்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் கரிக்கையூர், மெட்டுக்கல் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் சுமார் 6 கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக நடந்து ேசாலூர்மட்டம் கிராமத்திற்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். ேபாக்குவரத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்பதால், சாலையை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். சாலையில் ஏற்பட்டுள்ள பிளவு, சரிந்துள்ள மண், பாறைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மண் மிகவும் பிடிமானமின்றி உள்ளதால் உரிய அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு கருதி வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே மீண்டும் இப்பகுதியில் புவியியல் துறையினரும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.




Tags : Split Soil and Water Resources Scientists Study on Road Near Kotagiri ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்