×

ஊரக உள்ளாட்சி தேர்தல் பண்டிகைகள் அணி வகுப்பதால் கெடுபிடி காட்டுவதை தவிர்க்க வேண்டும்

திருவள்ளூர், டிச. 11: ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. அதற்கான வேட்பு மனுத்தாக்கல் துவங்கியுள்ளது. வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு என பண்டிகைகள் அணிவகுத்து வருகிறது. தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலில் சோதனை என்ற பெயரில்,கெடுபிடி காட்டுவதை தவிர்க்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே, நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும். தேர்தல் கமிஷன், போலீஸ் இணைந்து வாகன தணிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். அரசியல் கட்சியினர், 20 சதவீதம் சிக்கும் நிலையில் 80 சதவீத வியாபாரிகள், பொதுமக்கள் சிக்கி தங்களின் பணம், பொருட்களை பறி கொடுக்கின்றனர்.பின்னர் அவற்றை திரும்ப பெற கடும் அவதியை சந்திப்பர். உள்ளாட்சி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் முதல் வேட்பு மனுதாக்கல் துவங்கியுள்ளது.

இந்த முறை, உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக நீதிமன்றங்களில், தொடர்ந்த வழக்குகளால், தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், வழக்கத்துக்கு மாறாக தேர்தல் பறக்கும் படை உட்பட எந்த சோதனை குழுவையும் தேர்தல் கமிஷன் அமைக்காததோடு, வாகன தணிக்கை உள்ளிட்ட சோதனைகளையும் துவக்குவதற்கான அறிவிப்பை வெளியிடாதது, வியாபாரிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், ‘’டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் தான் தேர்தல் நடக்கிறது. ஆனால், அதற்கு முன் டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ், பின்னர் ஜனவரி 1ல் புத்தாண்டு, ஜனவரி 14ல், பொங்கல் என பண்டிகைகள் அணி வகுக்கின்றன.  பொதுமக்களின் நலன் கருதியும், பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையிலும், தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலில் சோதனை என்ற பெயரில், வியாபாரிகளிடம் கெடுபிடி காட்டுவதை தவிர்க்க வேண்டும்.  வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கிய நிலையில், கடந்த கால தேர்தல்களை போல் சோதனை என்ற பெயரில் கெடுபிடிகளை துவக்காதது, வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது’’ என்றனர்.

Tags : election ,festivals ,team ,
× RELATED 2021 சட்டமன்ற தேர்தல்: நாளை முதல் தேர்தல்...